அம்மா என் வெளிச்சம் ....
அன்பு உறவுகளே !! தோழர்களே !! நண்பர்களே !!!!! இந்த உலகில் ஒரு மனிதன்
பிறந்து மடியும் வரை ஆயிரக்கணக்கான உறவுகளையும்,நண்பர்களையும்
சந்திக்கின்றோம். ஒரு மனிதனிடம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து
கொள்ளுவதற்கு எத்தனையோ உறவுகள் அன்பாய் இருப்பது போல நட்பாய் இருப்பது போல
என் உயிருக்கு உயிராய் நேசிக்குறேன் என்று சொல்லுவதை போல உறவுகளை நாம் இந்த
மண்ணில் சந்திக்கிறோம் . ஆனால் கால ஓட்டத்தில், அப்படி சொன்ன உறவுகள்
எல்லாம் தங்களுடைய சுயங்களை காப்பதற்காக சொன்ன சொல்லில்
இருந்து மாறி விலகி இருக்கிறார்கள் . அன்பை விலை பேசுகிறார்கள்,
நம்பிக்கையை, சிதைக்கிறார்கள்.ஆனாலும் நாம் இந்த பூமியில் புதிய புதிய
உறவுகளோடு இணைந்து பயணப்பட்டு கொண்டே இருக்கிறோம் .
எந்த சுயமும்
இல்லாமல் ; எந்த லாப நோக்கமும் இல்லாமல்; கண்மூடி தனமாக அன்பையும்
பாசத்தையும் , நம்பிக்கையும் . ஒரு மனிதன் மீது வைத்து பாராட்டி,சீராட்டி
இந்த பூமியில் நிலையாய் நிற்கும் வரை துணையாய் இருந்து. அந்த மனிதன்,
அவனையும் காப்பாற்றி கொண்டு.அவன் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் நிலமைக்கு
வரும் வரை ஒரு குழந்தையை போல உச்சிமுகர்ந்து பாசம் காட்டி. இந்த பூமியில்
ஒரு மனிதனை நிலை நிறுத்துகிற ஒரே உறவு “அம்மா” என்ற பெரும் தெய்வம்
மட்டுமே.
ஆம், நண்பர்களே பத்து மாதம் சுமந்து வலியும் வேதனையும்
தாங்கி ஒரு குழந்தையை பெற்று எடுக்கிற தாய் அந்த குழந்தைக்கு பேச தெரியாது,
பசி என்று கேட்க தெரியாது; தாகம் என்று சொல்ல தெரியாது, ஆனாலும் அந்த
குழந்தையின் சினுங்களிலே அதனுடைய படுக்கை சரி இல்லை என்று உணர்ந்து சரி
செய்கிறாள் அம்மா !!
குழந்தையின் உதடுசற்று காய்ந்து போய் இருந்தாலும் அதற்க்கு உடனே தண்ணிர் தேவை என்று உணர்ந்து தண்ணிர் தருகிறாள் அம்மா!!
குழந்தையின் வயிறு உள்வாங்கி இருந்தாலும் தன்னுடைய இரத்ததை பால் ஆக்கி
அந்த பெரும் தெய்வத்தின் மார்பு வற்ற வற்ற அந்த பிள்ளையின் வயிறு முட்ட
முட்ட பசி ஆற்றி தூங்க வைக்கிறாள்.
ஒரு குழந்தை தனக்கு என்ன என்று
கேட்காமலே அதனுடைய தேவையை உணர்ந்து பாசம் காட்டி படிப்படியாக வளர்ந்து
ஆளாக்கி எந்த பிரதிபலனையும் எதிர்பாக்காமல். அந்த குழந்தையின் நலன் மட்டுமே
முன்னிருத்தி வாழ்கிற ஒரு தெய்வம் அம்மா.
ஒரு பிள்ளையை
காப்பதற்காக ஒரு தாய் வீட்டுவேலை செய்து காட்டுவேலை செய்து, கழனி வேலை
செய்து, வலிகளையும் , வேதனைகளையும் தாங்கி, தன் பிள்ளையிடம் மட்டும்
புன்முறுவலை காட்டி கிழிந்த சேலையை அவள் உடுத்தி கொண்டு புத்தம் புது ஆடையை
குழந்தைக்கு அணிவித்து பெருமை அடையும் பெரும் தெய்வம் அம்மா.
ஒரு
குழந்தை சிறுவனாய் வாலிபனாய்,திருமணமாகி, ஒரு குடும்பத்தின் தலைவனாய்;
அவன் ஒரு குழந்தைக்கு அப்பனாய்; அவன் பெற்றெடுத்த குழந்தைக்கு திருமணம்
செய்துவைத்து மாமனாராய் , தாத்தாவாய் மாறி வருடங்கள் பல கடந்து வயது ஆகி
இருந்தாலும் அந்த தாய் கடைசி வரை அந்த மகனை குழந்தையாகவே பார்க்கிறாள்.
ஆம் நண்பர்களே!! எனது தாய் அம்மாயி அம்மாள், அவள் சாகும் வரை என்னை
குழந்தையாகவே நடத்தினார்கள்,ஊருக்கே நான் சோறு போட்டு கொண்டு இருப்பேன்,
ஆனால் என் தாய் குழந்தை சாப்பிடுச்சா! சாப்பிடுச்சா!!!! என்று நூறு முறை
கேட்டு கொண்டு இருப்பார்.
காலையில் நான் வெளியே சென்று என்
தொழிலையும்,அரசியல் பணியையும் முடித்துவிட்டு ஏதோ ஒரு இடத்தில் சாப்பிட்டு
விட்டு ஒரு 12 மணிக்கு வருவேன். என் தாய் வீட்டு வாசலில் ரோட்டு ஓரத்தில்
தனியாக உட்கார்ந்து கொண்டு இருப்பார். நான் காரை விட்டு இரங்கியதும்
சாப்பிட்டியாபா என்று கேட்பார், சாப்பிட்டேன் அம்மா என்று சொன்ன பிறகு
என்னோடு தட்டி தடுமாறி வீட்டுக்குள் வருவார். அந்த தாயின் படுக்கையின்
அருகில் ஒரு தட்டில் சாதம் போட்டு வைத்து இன்னொரு தட்டால் அதை மூடிவைத்து
இருப்பார்கள். ஒரு சொம்பு நிறைய தண்ணிர் இருக்கும். நான் உள்ளே போனதும்
அம்மா சாப்பிட அமர்வாள். நான் உடை மாற்றி வருவதற்க்குள் சாபிடுபா
சாப்பிடுப்பா என்று பலமுறை என்னை கேட்டு கொண்டே இருப்பார்கள்.
நான் சாப்பிட்டு விட்டேன் நீ சாப்பிடு அம்மா என்று சொன்னாலும் ஒரே ஒரு வாய்
சாபிடுப்பா என்று தொல்லை செய்து , ஒரு பெரிய உருண்டையை சின்ன உருண்டை தான்
என்று சொல்லி வலுகட்டாயமாக உணவை ஊட்டி விடுவால்.
ஏன் அம்மா இப்படி
பண்ற நான் என்ன குழந்தையா என்று சலித்து கொண்டே சொன்னால் அம்மா சத்தமாக
சிரித்து கொண்டே நீ எப்பவுமே எனக்கு குழந்தைதான் ராசா என்று மனம்
உருகுவாள். அப்படி பாசம் காட்டி வளர்த்த என் பெரும் தெய்வம் அம்மா , என்
அம்மா இந்த உலகைவிட்டு மறைந்து விட்டார்.
அந்த பெரும் தெய்வத்தின்
நினைவுகளோடு,அவள் பட்ட கஷ்டங்களையும், பாடுகளையும் என்னை வளர்க்க, அவர்
சிந்திய வேர்வையும், கண்ணீரையும் நினைத்து கொண்டே பயணம் செய்கிறேன்.
இன்று அன்னையர் தினம்! என்று சொல்கிறார்கள் இல்லை!! இல்லை!!
இது பெரும் தெய்வத்தின் நாள்,
எந்த தெய்வமும் இதற்க்கு நிகரும் இல்லை,
எந்த தெய்வமும் இதற்க்கு சமும் இல்லை.
அந்த பெரும் தெய்வத்தின் நினைவாக கவிஞர். கபிலன், அவர்களின் வரிகளில் ,
தோழர் ஜெயமூர்த்தி அவர்களின் குரலில், சாய்சுரேஷ் இசையில் அமைத்த பாடல் இதோ
, உங்களுக்காக வெளியிடுகிறேன்.
தோழர்களே!!! அம்மா என்ற பெரும்
தெய்வத்தை பாசம் காட்டுங்கள் பாதுகாத்து வைத்து கொள்ளுங்கள் இல்லை என்றால்
நீங்களும் என்னை போல வெறுமையான மனிதர்களே.
அம்மா என் வெளிச்சம்
மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன்.