Pages

Friday, 5 August 2011

                     தமிழால் ஒன்றுபடுவோம்; தமிழனாய் ஒன்றுபடுவோம்
 

                                              என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு என்கிற நிலைப்பாட்டிலிருந்து தொடங்கியது. கல்லூரி மாணவனாக நான் சென்னையிலே படித்துக்கொண்டிருந்தபோது 1983ஆம் ஆண்டு ஈழச் சொந்தங்கள் எல்லாம் அகதிகளாகத் தமிழ் மண்ணுக்கு வந்து குவிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் உணர்வோடு பொங்கி எழுந்தோம், எங்களது குரலையும் ,அவர்களுக்கு ஆதரவாக இணைத்துக்கொண்டோம். எங்கெல்லாம் ஈழ விடுதலைக்கான ஆர்ப்பாட்டங்கள், அறப்போராட்டங்கள் நடைபெற்றனவோ அங்கெல்லாம் எனது பங்களிப்பு இயன்ற அளவுக்கு இருந்தது . அத்தகைய பங்களிப்பும் ஈடுபாடும்தான் என்னைப் பொதுவாழ்விற்கு அழைத்து வந்ததே தவிரச் சாதி உணர்வு என்னைப் பொதுவாழ்விற்கு அழைத்துவரவில்லை. நான் சாதிச் சங்கத்தில் சேர்ந்து அரசியல் ஆதாயத்தைத்தேடுகின்ற சாதிய மனோநிலைக்கு என்னை ஆளாக்கிக்கொள்ளவில்லை.

                                                      மேலும், இன்னொன்றை நான் சொல்ல விரும்புகின்றேன். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருபோதும் சாதிப் பெருமை பேசுவதில்லை ; 'சாதி வாழ்க' என்று முழங்கியதில்லை. எட்டுக்கோடித் தமிழர்களில் 'சாதி ஒழிக' என்று முழக்கம் எங்கே ஒலித்தாலும் அது சேரியிலிருந்துதான் ஒலித்திருக்கிறது; முதலியார் சங்கமோ, கவுண்டர் சங்கமோ, வன்னியர் சங்கமோ , பிள்ளைமார் சங்கமோ, ரெட்டியார் சங்கமோ, நாயக்கர் சங்கமோ, எந்தக் காலத்திலும் 'சாதி ஒழிக' என்று முழங்கியதாக ஒரே ஒரு சான்று உண்டா? யாராவது காட்ட முடியுமா? பார்ப்பனர் அல்லாத சாதிச் சங்கங்கள் என்றைக்காவது ஒரு நாள், 'சாதி ஒழிய வேண்டும்' என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியதாகச் சான்றுகள் உண்டா?

                                                   ஆனால் , தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்குப் போராடிய இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், அவர்களுக்கு முந்தைய தலைவர்கள் அனைவரும் 'சாதி ஒழியட்டும்' என்றுதான் குரலெழுப்பியுள்ளனர். அந்தக்குரலைத்தான் இன்றைக்குத் திருமாவளவனும் எதிரொலிக்கிறான். சாதி ஒழிப்பையும், தமிழ்த் தேசியத்தையும் முன்னெடுத்துச் செல்கிறான்.

                                                      சாதி ஒழிப்புக்குத் தமிழ்த் தேசியம் வழி. ஆனால் , அவை சமகாலத்தில் நடைமுறைக்கு வர வேண்டும்.'தமிழால் ஒன்றுபடுவோம்; தமிழனாய் ஒன்றுபடுவோம்'.

                                                                       அறிவர் . தொல். திருமாவளவன்

No comments:

Post a Comment