Pages

Sunday, 7 August 2011

 தமிழனுக்குத் தேவை தன்னுரிமை! தலை நிமிரத் தேவை மண்ணுரிமை !.

                                                                          தலைவர் . தொல். திருமாவளவன் 
                                                      ஒருபுறம் அந்நிய நாட்டுப் பன்னாட்டு நிறுவனங்கள், நமது நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் அள்ளிக்கொண்டு போகின்றன. இன்னொரு புறம் வடநாட்டைச் சார்ந்தவர்கள் கோடி கோடியாய்க் கொட்டி அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார​்கள். ஆனால், ...இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு,தலைமுறை தலைமுறையாய்க் குடியிருக்கும் குடிசையைக்கூடப் பட்டா வாங்க முடியாத நிலையிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 25 ஆண்டுகளுக்கு மேலாக மனைப்பட்டா பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலே ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.   இரயில்வேக்கு நிலம் எடுக்கின்ற போது எவனாலும் தடைவாங்க முடியவில்லை. எந்தச்சட்டத்தின் அடிப்படையிலே அதற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது? ஆனால், தாழ்த்தப்பட்டவனுக்கு காலனிமனைப்பட்டா வழங்குவதில் மட்டும், பட்டா கொடுப்பதற்கு முன்பே தடையும் கொடுத்துவிடுகிறார்கள். மனைப்பட்டாவுக்குத் தடைவாங்க முடியாத வகையில் ஒரு சட்டத்தை இயற்றி அந்த நிலத்தைக் கையகப்படுத்தக்கூடாதா? 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கிக்கிடக்கின்ற வழக்குகளை உடனடியாக பைசல் செய்யக்கூடாதா? ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிலப்பட்டா மற்றும் மனைப்பட்டா வழங்கக் கூடாதா?

                                                          ஆக, மனைப்பட்டா இல்லாமல் நிலப்பட்டா இல்லாமல் இவர்கள் கிடக்கின்ற காரணத்தினால்தான் தோழர்களே, இவர்கள் கண்டவனைக் கால்பிடித்து வாழ வேண்டிய நிலைமைக்கு, கைக்கட்டி நின்று வாழக்கூடிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்!

                                                       ஆகவே, ஒவ்வொருவருக்கும் மனைப்பட்டா வழங்கிவிட்டால் வீடு கட்டித் தந்துவிட்டால், அவனவன் வேலை செய்வானே தவிர எவன் காலையும் நக்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சாதியக் கட்டமைப்பு நொறுங்கிப் போய்விடும்! தவிடுபொடியாய்த் தகர்ந்துவிடும்! ஆனால், நிலம் இல்லை, மனைப்பட்டா இல்லை. ஆகவே தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை 90 களின் தொடக்கத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் முழங்கிவருகிறது. இந்த மண்ணுரிமையை வென்றெடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான் தோழர்களே,'தமிழனுக்குத் தேவை தன்னுரிமை! தலைநிமிரத் தேவை மண்ணுரிமை!' என்று முழங்குகிறோம். நான், தன்னுரிமைக்காகப் போராட வேண்டுமானால், எனக்கு மண்ணுரிமை வேண்டும்! நான் எங்கே நின்று போராடுவது? அந்தரத்தில் நின்றா போராட முடியும்? தன்னுரிமை பெற்ற ஒரு தேசமாக இந்தத் தமிழ்த் தேசம் விளங்க வேண்டுமானால், இந்த மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் மண்ணுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்! அவர்கள் சாதியால்யாராக இருந்தாலும், மதத்தால் யாராக இருந்தாலும், மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பது எவ்வளவு இன்றியமையாததோ, அனைவருக்கும் வேலைவாய்ப்பு எவ்வள்வு இன்றியமையாததோ அதைவிட இன்றியமையாதது அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் நிலம்! வீட்டையும் நிலத்தையும் கொடுத்தால், கல்வியும் வேலையும்தானாக வரும். கால் ஊன்றிப் போராடுவதற்கு வழியில்லாமல், கல்வி பெறுவதற்குக்கூடக் கையேந்தி நிற்கிறோம்.

                                                                               தலைவர் . தொல். திருமாவளவன்

No comments:

Post a Comment