நாடாளுமன்ற வளாகத்தில் திருமா உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரமாக தமிழ்நாடு கேரள எல்லையில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பேருந்துகள், சரக்குந்துகள் மற்றும் தனியார் வாகனங்களை கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் வழிமறித்து தாக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக, சபரி மலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இவ்வாறு சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், அதனை மேலும் ஊதிப் பெருக்குகிற வகையில் கேரள அரசியல் கட்சிகள் உண்ணாநிலை அறப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கே வசிக்கும் தமிழர்களுக்கு நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்காலமாக வழங்கியுள்ள தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது எனவும் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 144 அடி வரை உயர்த்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அணை உடையும் நிலையில் இருப்பதாக வதந்தியைக் கிளப்பி அப்பாவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் எனவும், புதிய அணை கட்ட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் 07 12 2011 ஒரு நாள் அடையாள உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டார்.
முன்னதாக காலை 11 மணியளவில் நாடாளுமன்ற அவை கூடியதும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரினார். கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு தொல். திருமாவளவன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.
'இந்திய அரசே இந்திய அரசே நடவடிக்கை எடு!,
உச்ச நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்து!,
தண்ணீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்து!,
வதந்தியைப் பரப்புவதைத் தடுத்து நிறுத்து!,
முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்று!
இரு மாநில உறவுகளை வலுப்படுத்து!'
போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் தொல்.திருமாவளவன் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாலையில் திமுக எம்பிக்கள் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment