Pages

Wednesday, 3 August 2011

  இது  ஒரு  புரட்சிகரக்கருத்தியலை  அடிப்படையாகக்கொண்ட  கட்சி


ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை ஏற்று அரசியல் செய்தவர்கள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் சாதிக்க முடியாததை எழுச்சித் தமிழர் இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார். தனித்துவமான அடையாளத்தோடு தலித் மக்களை அவர் ஒருங்கிணைத்து இருக்கிறார். தேர்தல் அரசியலை எடுத்துக்கொண்டாலும் கூட ஒரு தலித் கட்சி சுயேச்சையான சின்னத்தில் போட்டியிட்டுச் சட்டப் பேரவைக்கு உறுப்பினர்களை அனுப்பியது எழுச்சித் தமிழரின் தலைமையில்தான்.
இந்திய அளவில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி, லோக்ஜனசக்தி போன்ற தலித் கட்சிகள் இருக்கின்றன. அவை பலம் வாய்ந்த சக்திகளாகவும் கூடத்திகழ்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத சிறப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. இது ஒரு புரட்சிகரக்கருத்தியலை அடிப்படையாகக்கொண்ட கட்சியாகும். இந்துத்துவத்தை எதிர்த்துச் சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதோடு உலக அளவில் ஏகாதிபத்திய சக்திகளை எதிரிகளாக அடையாளம் கண்டு இடதுசாரிப் பார்வையோடு இது செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக்களத்திலும் தலைமை ஏற்று நிற்கிறது. இத்தகைய கருத்தியல் அடிப்படை இந்தியாவில் வேறு எந்த தலித் கட்சிக்கும்கிடையாது.
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் இயக்கம் மட்டுமல்ல. அது இங்கே இருக்கின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவருக்குமான அரசியல் தளமாக மாறியிருக்கிறது. இதுவரை புறக்கணிக்கப்பட்டு எந்த அரசியல் கட்சியாலும் கவனிக்கப்படாது ஒதுக்கப்பட்ட குறவர்கள், அரவாணிகள்,மீனவர்கள் முதலானவர்களையும் அரவணைத்து அவர்களையும் அரசியல் சக்தியாக எழுச்சிபெறச் செய்திருக்கிறது. இத்தகைய அணுகுமுறையால்தான் இன்று தமிழக அளவில் புறக்கணிக்கப்பட முடியாத அரசியல் சக்தியாக அது வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதற்கு முழுமுதல் காரணம் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்தான் .

                                                                                               எழுத்தாளர் ரவிக்குமார்

No comments:

Post a Comment