காதல் கூட சாதி பார்த்த பிறகு தான் வருகிறது
தலைவர் தொல். திருமாவளவன்
மனிதனுடைய போராட்டமே ஒருவனுடைய உழைப்பை இன்னொருவன் சுரண்டக் கூடாது என்பதுதான் மிக முக்கியமான அடிப்படை! ஒருவன் இன்னொருவனை ஏய்க்கக் கூடாது: ஒருவன் இன்னொருவனுடைய உழைப்பைச் சுரண்டக் கூடாது; ஒருவன் இன்னொருவனுடைய உரிமையைப் பறிக்கக் கூடாது; ஒருவன் இன்னொருவன் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது; ஒருவன் இன்னொருவனுடைய சனநாயகத்தை நசுக்கக் கூடாது. இதன் அடிப்படையில் நாம் போராடுவதற்கு மனிதநேயம் தேவை. மனிதநேயத்திற்கு அடிப்படையான பண்பு சனநாயகப் பண்பு ஆகும்! சனநாயகம் எங்கே வரும் ; எந்த இடத்தில் பிறக்கும் அல்லது, எங்கு முளைக்கும் என்றால் அது, மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வையில் இருந்துதான் வரும்.
சாதியைப் பார்த்து உறவைத் தீர்மானித்தால் அங்கு சனநாயகம் பிறக்காது, மனிதநேயம் பிறக்காது. நிறையப் பேர் சாதியைத் தீர்மானித்த பிறகுதான் நண்பர்கள் வட்டத்தையே தீர்மானிக்கிறார்கள் சாதியைப் பார்த்த பிறகுதான் காதலையே தீர்மானிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் கடைக்கண் பார்வையில் வெற்றிபெற்ற பிறகுகூடச் சாதியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு இந்தச் சாதி நமக்கு ஒத்துவராது. எங்கப்பா இந்தக் காதலை எற்றுக்கொள்ளமாட்டார். அதனால், நாம் நண்பர்களாகவே இருந்துகொள்வோம் என்று அவர்களே முடிவு செய்கிறார்கள் . அந்த அளவிற்கு மனித உறவைத்தீர்மானிக்கிற இடத்தில் சாதி வந்து நிற்கிறபோது . தமிழ்த் தேசியம் என்கிற அரசியல் அடிபட்டுப்போகிறது, ஆகவே, தமிழ் இனம் இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் வீழ்த்த்ப்பட்டுச் சரிந்து கிடக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.
தலைவர் தொல். திருமாவளவன்
No comments:
Post a Comment