Pages

Thursday, 7 June 2012

சாதி ஒழிப்பிற்கு முதன்மையான கடமை

                           




                                                                 இந்த மண்ணில் ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை அனைத்துத் தளங்களிலும் சாதியத்தின் ஆளுமை மேலோங்கி இருக்கிறது.
மண்ணை இழந்தாலும் மானத்தை இழந்தாலும் சாதியை இழக்க முடியாது என்னும் பித்துக்குளித்தனம் இங்கே தலைவிரித்தாடுகிறது. குடியிருக்கும் இடம் , குளிக்கும் குளம், கும்பிட்டு வழிபடும் கோவில், சுடுகாடு போன்ற மனித வாழ்வின் அடிப்படைத்தளங்கள்  ஒவ்வொன்றும் சாதியைத் தவிர்த்து அமைந்திடவியலாது
என்னும் வகையில், இங்கே சாதிய தருமத்தின் ஆட்சிகொடி கட்டிப் பறக்கிறது சாதியத்தன்மையின்றி தமிழ்ச்  சங்கங்களைக்கூட  கட்ட முடியாத நிலைதான் நிலவுகிறது. திரைப்பட ரசிகர்சங்கமாக இருந்தாலும், உழைக்கும் தொழிலாளர் சங்கமாக இருந்தாலும், அரசு ஊழியர் சங்கமாக இருந்தாலும் அனைத்திலுமே சாதியத்தின் வேர்களே விரவிப் பரவிக்கிடக்கின்றன .



இந்நிலையில், அரசியல் கட்சிகள் மட்டும் அதற்கு எங்ஙனம் விதிவிலக்காக அமையும்? அனைவருக்கும் பொதுவான சங்கம் , இயக்கம், கட்சியென பெயர் சூட்டிக் கொண்டாலும் அவற்றின் உயிர் நாடியாக சாதியே வெளிப்படையாகவோ, உட்கிடையாகவோ இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் சாதிய முரண்பாடுகளை நம்பியே உருவாகின்றன:
உயிர்  வாழ்கின்றன. அத்தகைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும்  சட்டமன்றத்தில் எவ்வாறு சாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வருவார்கள்? அரசியல் கட்சிகளுக்கு சாதியும் மதமும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கருவிகளாகவே பயன்படுகின்றன. இவிரன்டையும் கைவிட்டு விட்டு இன்றைய அரசியல் கட்சிகளால் இயங்கவே முடியாது என்பதை நாம் உணரவேண்டும். சாதியை ஒழிக்கவும் சாதியின் பெயரால் விளையும் கேடுகளையும் ஒழிக்கவும் காலங்காலமாக சாதியின்  அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட சேரிவாழ் மக்களின் எழுச்சியால் மட்டுமே முடியும்.மாறாக, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும், பெருமை கொள்ளும் கும்பலின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளவரை சாதியை ஒழிக்க சட்டங்கள் வந்தாலும் அவற்றால் ஒருபோதும் பயன் விளையாது.

சட்டம் போட்டு சாதியை ஒழிக்க முடியாது, சாதிக்கட்சிகளை தடுக்க முடியாது. சாதி - மத வன்கொடுமைகளை நிறுத்தமுடியாது என்பதை கடந்தகால வரலாற்றின் மூலம் காண முடிகிறது. நிலைகுலையாதநெஞ்சுரத்தொடும் பின்வாங்காத போர்க்குணத்தோடும் சமரசமின்றி நடத்தப்படும் தொடர்ச்சியான வெகுமக்களின் போராட்டங்களின் மூலமே சாதி ஒழிப்பை முன்னெடுக்க முடியும். நிறைவேற்ற முடியும்.  ஆகவே, சாதியச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இன்றைய  சாதி ஆதிக்கத்தை உடைக்க  புரட்சிக்கான நெருப்பு புகைந்து கொண்டிருக்கும் சேரிகளை உசுப்ப வேண்டியதே முதன்மையான கடமையாகும். 


                                                                                -தலைவர் தொல். திருமாவளவன்.

No comments:

Post a Comment