Pages

Wednesday, 12 November 2014

வயிறு வளர்ப்பதற்கல்ல சமூகநீதி !

இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி கோட்பாடு இந்தியளவில் பல்வேறு ஆண்டுகளாகவே விவாதப் பொருளாக இருந்துவருகிறது. சமூக நீதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து குரல்கள் வலுத்துக் கொண்டே வருகிற சூழலில், தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற குரலும் வலுவாக ஒலிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களாகவே இருக்கிறார்கள். இதுநாள்வரை சமூகநீதி அரசியல் பேசியவர்கள் கூட தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். 'சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான், எல்லா சமூக மக்களுக்கும் உரிய பிரிதிநிதித்துவத்தை சரியாக பகிர்ந்தளிக்க முடியும், அதுதான் சமத்துவத்திற்கான வழி' என்று வாதிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் மேலெழுந்தவாரியாக பார்க்கையில், இது சரியான கருத்தாக தோன்றினாலும், கூட சமூக நீதி பார்வையில் அது சரியான கருத்தல்ல. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிற சமத்துவவாதிகள் “பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் கடும் வறுமையில் இருப்பதோடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின் தங்கியுள்ளதாகவும்” கூறுகிறார்கள். சமத்துவவாதிகளின் இந்த கூற்றின் மூலம் நாம் ஒன்றை மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அதாவது சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் அவர்களின் நோக்கம் சமூக நீதியல்ல, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வறுமையை போக்க, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதி என்பது வெறும் பொருளாதார கண்ணோட்டம் அல்ல, அது சமூக கண்ணோட்டமாகும். அதாவது சாதிக்கொடுமையும், அதனூடான தீண்டாமைக் கொடுமையும் உச்சத்தில் இருந்த காலங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் மோசமான இழிவுக்கும், கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அத்தகைய கொடுமைகளால் சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்தார்கள். சமூக கொடுமையில் இருந்தும், அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த இழிவுகளில் இருந்தும் அவர்களை விடுவிக்கும் நோக்கத்தையே இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி கோட்பாடு பிரதானமாக கொண்டிருக்கிறது. அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவுகளில் இருந்து விடுபட்டு, சமூகத்தின் சகல வாய்ப்புகளை அவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக கல்வியும், அதிகாரங்களும் மறுக்கப்பட்டு, அடிமாடுகளை போல கொடுமைபடுத்தப்பட்ட அவர்களை அக்கொடுமைகளில் இருந்து விடுவிக்கவும் தான் கல்வியில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றபடுகிறது. ஆக சமூகநீதியின் நோக்கம் இதுவாக இருக்கும் போது, ஒருவனின் வறுமை நிலையை காரணம் காட்டி, அவனின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது எப்படி சமூக நீதி கொள்கையாக இருக்க முடியும்?  

சாதிவாரி கணக்கெடுப்பும் - பொருளாதார சமத்துவ வாதமும்

இன்னென்ன சாதியை சேர்ந்தவர்கள், இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற கணக்கெடுப்பை எடுப்பதனால் என்ன இழப்பு வந்துவிட போகிறது? என்று எளிதாக எல்லோரும் கேட்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பினால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு கிடைக்கும், இப்போது இருப்பதை விட கூடுதலான ஒதுக்கீடுகள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் நாக்கில் தேன் தடவிக் கொண்டு பேசுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அப்படியான எந்த உறுதியையும் கொடுக்கவல்லதாக இல்லை. நாடெங்கிலும் இருக்கும் பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் தங்களை பிற்படுத்தபட்டோர் மற்றும் மிக பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் தீண்டாமைக் கொடுமையில் இருந்து தப்பி பிழைக்க கிறித்தவ மதங்களுக்கு சென்ற கோடிக்கணக்கான தலித் கிறித்தவர்கள் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இருக்கிறார்கள். இசுலாமிய மதங்களுக்கு சென்ற தலித்துகள் ஏராளமானோர் சிறுபான்மையினர் பட்டியலில் இருக்கிறார்கள். இப்படியாக தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதையும், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தபட்டோர் சாதி மக்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதையும் அறிந்தே தான், ராமதாஸ் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதி தலைவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பை தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். எங்கள் சாதிக்காரர்கள் இத்தனை கோடி பேர் இருக்கிறோம் என்று தங்கள் சாதி வலிமையை கூட்டி காட்டி, நாங்களே இந்த நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள் என்று பேசத் துவங்கி விடுவார்கள். அதனால் எண்ணிக்கையில் மிக குறைவாக இருக்கிற சாதியினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படலாம்.

மதம் மாறிய தலித்துகள், அவர் கிறிஸ்தவ  மதத்திற்கோ அல்லது முஸ்லிம் மதத்திற்கோ மற்ற எந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் அவர்களும் தலித் பட்டியலில் இருந்தே பயன் அடைய வேண்டும். ஒருவர் கிறிஸ்தவராக மாறிவிடுவதால் அல்லது இஸ்லாமியராக மாறிவிடுவதால் அவனை புழுங்கும் சாதியாக எந்த சாதியும் கருதுவதில்லை. மாறாக நாடர் கிறிஸ்தவர், தேவர் கிறிஸ்தவர், நாயுடு கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்று சாதி ரீதியாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் தலித் கிறிஸ்தவர்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைத்து தலித் மக்களுக்கு மிக பெரிய துரோகம் இந்த அரசு செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. தலித் அல்லாத அனைத்து சாதியினர் கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்களும், சாதிய வன்கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டு வரும் சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு செய்வதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் மீது பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்களின் பெரும்பான்ப்மை பலத்தை கொண்டு மீண்டும் மேலாதிக்கத்தை நிறுவ முயல்வார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.       

கணக்கெடுப்பு முடிவில் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு உரிய ஒதுக்கீடு முறையாக அளிக்கப்படவில்லை என்கிற வாதம் வலுப்பெறுமானால், அவர்களுக்கான கூடுதல் ஒதுக்கீட்டை எங்கிருந்து பெற்றுக் கொடுப்பார்கள்? என்கிற முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. அதாவது 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் 18 சதவிகித இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமிருக்கிற 32 சதவிகிதத்தை தான் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தபட்டோர், சிறுபான்மையினர் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த விகிதாச்சாரம் போதவில்லை, அவர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமெனில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிற ஒதுக்கீட்டில் இருந்து பறித்து தான் அவர்களுக்கு கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதத்தைத் தாண்டக் கூடாது என இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் இட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டை குறைத்து, பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தபட்டோர்களுக்கு உயர்த்தி கொடுக்கவே ஆட்சியாளர்கள் எத்தனிப்பார்கள். 18 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கும் போதே, நடைமுறையில் வெறும் 4 சதவிகிதம், 5 சதவிகிதம் என்கிற அளவில் தான் அமுல்படுத்தபடுகிறது. எதார்த்தம் இப்படி இருக்கையில் பதினெட்டிலும் குறைத்துவிட்டால், நடைமுறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுத்தமாக ஒதுக்கீடே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். அதுதான் உயர்சாதி இந்துக்களின் திட்டமாகவும் இருக்கிறது. 


பொருளாதார சமத்துவ வாதம் ஏற்புடையதா?

இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறவர்கள், “அவரவர் பங்கு அவரவர்க்கு கிடைக்கவேண்டும்” என்கிற ரீதியில் பேசுகிறார்கள். அதுதான் சமத்துவத்திற்கான வழி என்றும் சொத்தையான வாதத்தை முன்வைக்கிறார்கள். பொருளாதரத்தில் சமத்துவம் வேண்டும் என்று வரிந்து கட்டுகிற இவர்களுக்கு, இன்றைக்கு நாட்டில் நிலவும் சாதிக்கொடுமையினால், மனிதனுக்கிடையிலே சமத்துவம் இல்லை என்பது தெரியாதா? ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் தாழ்த்தப்பட்டவர், கோவிலுக்குள் சென்றுவிட்டார் என்பதால் கோவிலை தூய்மைபடுத்திய கொடுமை நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்ததல்ல, அந்த கொடுமை நிகழ்ந்து சில மாதங்கள் கூட ஆகியிருக்காத நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் எனும் உயரிய பொறுப்பில், அதிகாரத்தில் இருக்கும் அவருக்கே இந்த நிலைமை என்றால், ஒரு பாமர தாழ்த்தப்பட்டவன் அன்றாடம் எத்தனை இழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறான் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். தாழ்த்தப்பட்டவன் எங்கும் செல்லலாம், யாரோடும் பழகலாம், விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற சமத்துவமான நிலை இல்லாத சூழலில், பொருளாதார சமத்துவத்திற்கு என்ன அவசரம் வந்துவிட்டது? ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் கூட, ஒரு சாதாரண உயர்சாதி இந்துக்களின் பார்வையில் தீண்டப்படாதவராகவே பார்க்கபடுகிற சூழலில் இன்னமும் இங்கு மனித மனங்களிலே சமத்துவ எண்ணம் இல்லாத நிலையில் பொருளாதார சமத்துவ வாதம் என்பது ஏற்புடையது கிடையாது. 

பொருளாதார சமத்துவ வாதம் பேசுபவர்களுக்கு சில கேள்விகள்

1. பொருளாதார ரீதியில் எல்லா மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால்  இங்கே ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதி இழிவு நீங்கிவிடுமா?

2. ஒருவரிடம் இருப்பது போல, பணமும், சொத்தும், ஆடம்பர வசதிகளும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவது தான் சமத்துவம் என்றால் வசதி வாய்ப்புகளோடும், மாநிலத்தின் முதல்வர் என்ற உயரிய அதிகாரத்தோடும் இருப்பவர் மீதே, அவர் தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்திற்காக தீண்டாமை கொடுமை பிரயோகிக்கபடுகிறதே அதற்கு பெயர் என்ன?

3. சாதிவாரி கணக்கெடுப்பு கோருபவர்களின் கூற்றுப்படி, என்னிடம் இருக்கும் பணத்தையும், சொத்துக்களையும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க நான் தயார். அதேபோல ஆண்டாண்டு காலமாக என் முப்பாட்டன்கள் மீதும், என்மீதும்  சுமத்தப்பட்டிருக்கும் சாதி இழிவுகளை உயர்சாதி இந்துக்களும் பகிர்ந்து கொள்ள தயாரா?

4. ஒருவனின் வறுமை நிலையை காரணம் காட்டி, அவனின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இட ஒதுக்கீடு கேட்பது எப்படி சமூக நீதி கொள்கையாகும்? அப்படியெனில் பார்ப்பனர்களில் கூட கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்துவிடலாமா?
  

5. ஒவ்வொரு ஆண்டும் கவுரவக் கொலைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறதே அதற்கு என்ன காரணம்? பொருளாதார சமத்துவம் இல்லாமை தான் காரணமா?

6. சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் ராமதாஸ் போன்றவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை காப்பதற்காகவா கணக்கெடுப்பு கோருகிறார்கள்?

7. பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் கடும் வறுமையில் இருப்பதோடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின் தங்கி இருக்கிறார்கள் எனில், அறுபது ஆண்டுகால இட ஒதுக்கீடு கொள்கையினால் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டார்களா?

8. சட்டப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கின்ற போதே, முழுமையாக அமுல்படுத்தாதவர்கள், அதையும் குறைத்துவிட்டால், முழுமையாமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடே வழங்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

9. முந்தைய காலங்களில் பிராமிணர்கள், அவர்களுக்கு கீழிருந்த சாதியினரை மேலாதிக்கம் செய்ததை போல, இப்போது பிராமிணர் அல்லாதவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மேலாதிக்கம் செய்கிறார்கள். தற்போது அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை கொடுத்து அவர்களை மேலும் வலுப்படுத்தினால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இன்னமும் மோசமான மேலாதிக்கங்களை செலுத்தமாட்டார்கள் என்பதற்கு ஏதாவது ஊத்திரவாதம் இருக்கிறதா?         
   
மேலுள்ள என் எந்த கேள்விக்கும் நேர்மையாக பதில் கூறுகிற எவரும், இந்திய சமூக சூழலில் நிலவிவரும் மோசமான சாதிய வன்கொடுமைகளையும், அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் ஒப்புக் கொள்வர். ஆக தாழ்த்தப்பட்டவர்கள் பொது சாலையில் நடக்க முடியாத சமூகத்தில், பொதுக்குளத்தில் நீரெடுக்க முடியாத சமூகத்தில், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடந்து விரும்பியவர்களோடு சவுகரியமாக புழங்க முடியாத சமூகத்தில், கோவிலுக்குள் செல்ல முடியாத நிலையிருக்கிற சமூகத்தில் பொருளாதார சமத்துவவாதம் அபத்தமானது என்கிற என் வாதத்தையும் ஒப்புக் கொள்வர் என்று நம்புகிறேன். 

இந்த மானுடத்தின் பிரிதிநிதிகளான, கடைசி மனிதர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதிய ஏற்றதாழ்வுகள் அற்ற சமூக சமத்துவம் கிடைக்கும் வரை பொருளாதார சமத்துவவாதம் என்கிற மோசடித்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சாதிவாரி கணக்கீடு கோருகின்ற, பொருளாதார சமத்துவவாதம் பேசப்படுகின்ற இன்றைய சூழலிலும் கூட, தாழ்த்தப்பட்டவர்கள் ஏராளமான வன்கொடுமைகளுக்கும், தீண்டாமை இழிவுகளுக்கும் உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். ஆக பொது சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்தை, தாழ்த்தப்பட்டவர்களை சக மனிதராக உயர்சாதி இந்துக்களும், இந்துத்துவ அடிப்படைவாதிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்வரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடுகளை முழுமையாக எல்லா தளங்களிலும், கல்வி முதல், அரசியல் அதிகாரம் வரை எல்லா மட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீட்டை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.  

என்னை சக மனிதனாக ஒப்புக்கொண்டு, என்மீது திணிக்கப்பட்டிருக்கும் தீண்டாமை கொடுமைகளுக்காக உயர்சாதியினர் வெட்கி தலைகுனியும் நாளன்று உங்களோடு சேர்ந்து நானும் பொருளாதார சமத்துவ வாதத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயார். அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீட்டை அதிகரித்து கொடுக்க வேண்டும். அதோடு மனிதனுக்கு, மனிதன் சமத்துவம் உருவாகும் வரை சமூகநீதி கோட்பாடு பாதுகாக்கப்படும். சமூகநீதி என்பது சமூகத்தின் கீழிருப்பவரை மேலுக்கு கொண்டுவர செயல்படுத்தப்படும் சிறப்பு முன்னுரிமையே தவிர, மேலிருப்பவர்களை மேலும் வலுப்படுத்துவதற்கு அல்ல. அதோடு சமூகத்தில் சமத்துவத்தை நிறுவ முயலும் மகத்தான கோட்பாடே சமூகநீதியாகும், மாறாக வசதி வாய்ப்புகளையும், பொருளாதார வலிமையும் பெற்று வயிறு வளர்ப்பதர்க்கல்ல...

- மடிப்பாக்கம் வெற்றிசெல்வன்

No comments:

Post a Comment