கம்யூனிஸ்டு தோழர்களுக்கு ஒரு கடிதம்
அன்பு தோழர்களே... தம்பிகளே...
கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி தமிழகத்தில் மிக மோசமான சூழல் நிலவிவருகிறது. மோசமான சூழல் என்று சொல்வதை காட்டிலும், அபத்தமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த அபத்தங்களை எல்லாம் பார்க்கும் போது ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலமான 1991 – 96 ஆண்டுகளில் நடந்த காட்டாட்சி தர்பார் என் மனக்கண்முன்னால் வந்து வந்து போகின்றன. ஜெயலலிதாவின் முதல் ஆட்சிகாலம் தமிழகத்தின் இருண்டகாலம் என்று சொல்லுமளவிற்கு “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற கொடுநெறி ஆட்சி நடந்தது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்தது, காவல் நிலையத்தில் வைத்தே சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்பட்டார், இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி கொடுமை அரங்கேறியது, கட்டாய மதமற்ற தடைசட்டத்தை கொண்டுவந்தார், மேலவளவு முருகேசன் படுகொலை நடந்தது, காவல்நிலைய கொலைகள் ஏராளமாக நடந்தது, அத்துமீறி காவல்துறையினர் சேரிகளில் நுழைந்து கொடுமைகளை இழைத்தனர், திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை அரங்கேறியது, தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அத்தனை காரியங்களிலும் ஜெயலலிதா முனைப்பு காட்டினார். அரசு ஊழியர்களை மிரட்டி பணியவைத்தார். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஒரே கையெழுத்தின் மூலம் வேலையை விட்டு தூக்கினார், வேலைவாய்ப்புகள் முடக்கப்பட்டன, திருப்பூரில் தொழிலாளர்களுக்கு கஞ்சி தொட்டி திறக்கும் அவலநிலை ஏற்பட்டது, உரிமைகளுக்காக போராடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சியை நிறுவினார். “தமிழகமே சிறையில் இருக்கிறது” என்று அன்றைக்கு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டிருந்தபோது நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் DYFI நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.
ஜெயலலிதாவின் கொடுநெறி ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்த நேர்மையான கம்யூனிஸ்டுகளில் நானும் ஒருவன். அன்றைக்கு இருந்த கம்யூனிஸ்ட், மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று போராடியது. 96யில் அதிமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக கம்யூனிஸ்ட்கள் இருந்தார்கள். ஊர், ஊராக சென்று ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலபடுத்தினோம். ஒவ்வொரு பேருந்தாக ஏறி, பயணிகளிடமும் ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலபடுத்தினோம். உரிமைகளுக்காக போராடுபவர்களின் உற்ற தோழனாக இருந்தோம். சிதம்பரம் பத்மினிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டம் அளப்பரியது. வாச்சாத்தி கொடுமையை உலகறிய செய்து, நீதிக்காக போராடியது கம்யூனிஸ்டுகள். தலித் மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டம் நடத்தினோம். பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த சனநாயக இயக்கங்களோடு இணைந்து போராடினோம். தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடினோம், மதவாதத்தை எதிர்த்து போராடினோம், மொத்தத்தில் அநீதிக்கு எதிராக போராடினோம். இப்படியாக கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
91யில் ஆசிரியர்களுக்காக மவுண்ட்ரோட்டில் நடந்த போராட்டத்தில் ஜெயலலிதா அரசு காவல்துறையின் காட்டுமிராண்டிதனங்கள் என்றும் என்னால் மறக்க முடியாத கொடுமை. அன்றைக்கு நடந்த போராட்டத்தில் பெண் தோழர் ஒருவரை காவல்துறையினர் அடிக்க முயன்றபோது, குறுக்கே நான் பாய்ந்து தடுத்தேன். அத்தனை அடிகளையும் என்மேல் தாங்கினேன். அருகில் இருந்த கடைக்குள் தள்ளி பெண் தோழரை காப்பாற்றினேன். திமிர்பிடித்த போலீஸ்காரன் என் நெஞ்சில் எட்டி உதைத்த போது, அந்த வலிகளையும் தாங்கி கொண்டு, ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று பெருமைபட்டேனே ஒழிய, ஒருபோதும் வேதனைப்படவில்லை. அன்றைக்கு “கம்யூனிஸ்ட் என்பவன் நேர்மையானவன், நேர்மையான அரசியலுக்கு துணைபோக கூடியவன்” என்று நினைத்து என்னை போன்ற பலரும் பெருமைபட்டார்கள். எந்த ஜெயலலிதாவின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து தடியடி வாங்கினோமோ, எந்த ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலபடுத்த போராடினோமோ, அந்த ஜெயலலிதாவோடு கூட்டணி என்று அகில இந்திய தலைமை அறிவித்தவுடன் மனதளவில் நொறுங்கி போனோம். கம்யூனிஸ்ட்களால் கிழிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முகத்திரை, மீண்டும் கம்யூனிஸ்டுகளாலே ஒட்டப்பட்டது. மக்கள் விரோதி என்று என்னைப் போன்றவர்களால் உச்சரிக்கப்பட்ட ஜெ.வை புரட்சி தலைவி என்று உச்சரிக்க அகில இந்திய தலைமை வலியுறுத்தியது. ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக மாறி, மாறி கூட்டணி வைத்ததால் மக்களோடு மக்களாக நின்ற கம்யூனிஸ்ட்கள், பின்னாளில் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டார்கள். நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன். இயக்கத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டாலும் இன்றைக்கும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்டின் உணர்வுகளோடு, அண்ணன் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் சிறுத்தையாய் சாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு போன்ற களங்களில் மக்களோடு மக்களாக நிற்கிறேன். ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் அநீதிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்வானே ஒழிய, அதற்கு ஆதரவாக அமைதி கொள்ள மாட்டான். அப்படித்தான் நானும் என்னால் முடிந்தவரை அநீதிகளை எதிர்த்து குரல்கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் அவர்களே கூட, “நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று சொல்லுமளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேர்மையும், களப்பணியும் பாராட்டத்தக்கது.
தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அன்றைக்கு மவுண்ட் ரோட்டில் நடந்த போராட்டத்தில் நெஞ்சில் உதைபட்டு வந்த எனக்கு, என் அம்மா அழுத கண்களோடு மருந்து போட்டார்கள். அதோடு ஜெயலலிதாவை வாய்க்கு வந்த வார்த்தைகளால் வசைபாடினார்கள். தமிழ்நாடே ஜெயலலிதாவிற்கு சாபம் இட்டது. இன்றைக்கு என் அம்மா வயதுடைய பெண்கள் எல்லாம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்காக ரோட்டில் கிடந்தது மாரடித்து கொண்டு அழும் காட்சியை காணும் போது நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடவேண்டிய சமூகம், இவ்வளவு தூரம் காயடிக்கப்பட்டிருக்கிறதே என்ற ஆற்றாமையில் தவிக்கிறேன். மறுபுறம் பலரும் அதிமுக தொண்டர்களின் முறையற்ற செயல்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வித கருத்தியலும் இன்றி, வெறும் உணர்ச்சியின்பால், கவர்ச்சியின்பால் ஒரு தலைமையை ஏற்றுக்கொண்ட அவர்கள், அவரவர் சுயத்தை மையாக கொண்டு, அவர்களின் தலைமைக்கு விசுவாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய கருத்தியலை, கோட்பாட்டு பொக்கிஷத்தை பெற்றிருக்கும் கம்யூனிஸ்டுகள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் எண்ணி பார்க்க வேண்டும். இந்த சமூகம் இவ்வளவு தூரம் காயடிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நேர்மையான கம்யூனிஸ்ட் என்ற முறையில், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீதே என் விமர்சனத்தை முன்வைக்க விரும்புகிறேன். மக்களின் உரிமைகளுக்கும், நேர்மையான அரசியலை மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கம்யூனிஸ்டு இயக்கம், ஒரு சிலரை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவதற்கும், ஊழல்வாதிகளை மாறி, மாறி வளர்த்துவிட்டதில் பெரும் பங்கு வகித்தார்கள். மக்கள் விரோதிகளை மிக சரியாக அடையாளம் காட்ட தவறியவர்கள். காங்கிரசை ஊழல் இயக்கம் என்று குற்றம் சுமத்தினார்கள், ஆனால் கம்யூனிஸ்ட்களின் ஆதரவோடு பத்தாண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்தது. மதவாதத்தை எதிர்ப்போம் என்றார்கள், இன்றைக்கு மதவாத பிஜேபி, அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துவிட்டது. இன்றைக்கு நடக்கும் அபத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகளும் ஒருவிதத்தில் பெறுப்பேற்கத்தான் வேண்டும். “தனி மனித ஊழல்களால் தேசம் பாழ்பட்டுவிடாது” எனக்கூறி ஊழல்வாதி ஜெயலலிதாவின் செல்வாக்கை மக்கள் மன்றத்தில் மீண்டும் வளர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள். மதவாத எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, சாதிபேத எதிர்ப்பு, பாட்டாளி வர்க்க ஒற்றுமை போன்ற பல்வேறு சுமைகள் கம்யூனிஸ்டுகள் முன் கிடந்தாலும், ஒரு தவறுக்காக, இன்னொரு தவறை ஆதரிக்க கூடிய பரிதாபகர நிலைக்கு கம்யூனிஸ்டுகள் சென்றதேன்? என்ற கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. மக்களை நம்பாமல், ஊழல் இயக்கங்களை நம்பியதன் விளைவே அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைக்கும் பெரும்பாலான தோழர்கள் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நேர்மை, இந்த சமூகத்திற்கு துளியும் பயன்படவில்லை என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது. தன்னளவில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட, தேர்தல் அரசியலில் சதுரங்க விளையாட்டில் சிக்கி சிதறுண்டு போய் கொண்டிருக்கிறார்கள்.
தன் தவறுகளை உணர்ந்து, மீண்டும் தோழர்கள், மக்களோடு கரம் கோர்த்து, மதவாதிகளையும், ஊழல்வாதிகளையும் ஒரே நேர்க்கோட்டில் அம்பலப்படுத்தி உண்மையான மக்களாட்சி மலர பாடுபடவேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் ஆத்மார்த்தமான விருப்பமாகும்...
தோழர்கள் செய்வார்களா???
- மடிப்பாக்கம் ச.வெற்றிசெல்வன்.
No comments:
Post a Comment