பொறுப்பற்ற ஊடகங்களால் பாதிக்கப்பட்ட பெண் !
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை முழுவதும் ஒரு பெண் திருடுவதாக வாட்ஸ் அப் மற்றும், பேஸ்புக்குகளில் செய்தி உலாவந்தது. "அழகாக இருப்பாள், நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசுவாள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கேஸ் கனெக்சன் கொடுக்க வந்துள்ளதாக கூறி, திருடுவாள்" என்ற இட்டுகட்ட பொய்யை கூறி அவருக்கு திருடி பட்டம் கட்டினார்கள். அப்பெண்ணின் அதனை தொடர்ந்து செய்தி தாள்களில் கூட அந்த பெண்ணின் புகைப்படத்தோடு செய்தி வந்தது. தற்போது அந்த செய்தி பொய் என்று தெரியவந்துள்ளது. அப்பெண் மேலும் அப்பெண் சைபர் க்ரைமில் சம்பந்தப்பட்டவர்கள் மீது , புகார் தெரிவித்துள்ளார். உண்மையில் அப்பெண் ஐ.டி. கம்பெனியில் பணி புரிகிறார்.தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறாக வாட்ஸ் அப் மற்றும், பேஸ்புக்களில் அவதூறு பரப்பும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தனிநபர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களுக்கு தண்டனை வழங்க, சட்டத்தில் இடமிருக்கிறது. 66A சட்டப்பிரிவை பயன்படுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும். தற்போது அப்பெண்ணின் புகாரின் பேரில் சமந்தப்பட்ட நபர் பிடிபடும் பட்சத்தில் அவர் தண்டிக்கப்படலாம். ஆனால் உண்மையை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், அவசரக் கோலத்தில், அள்ளித் தெளித்த வேகத்தில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
சமீப நாட்களில் ஊடகங்களின் பெறுப்பற்ற செயல்களால் இதுபோன்ற தவறான செய்திகள் அதிகளவில் வெளிவருகின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் என்று பெருமை பீற்றிக் கொள்பவர்களுக்கு, கொஞ்சமேனும் சமூக பொறுப்பு இருக்க வேண்டாமா? தவறான செய்தியின் மூலம் அப்பெண்ணுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய ஊடகங்கள், இப்போது அப்பெண்ணின் இழந்த மரியாதையை எப்படி மீட்டுத் தரப் போகிறார்கள்? செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமல் முதலில் செய்தி சொல்லவேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் செய்த தவறால், அப்பாவி பெண் ஒருவர் அநியாயமாக பாதிக்கப்பட்டுள்ளார். திருடி என்று செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தற்போது அது தவறான செய்தி என்று தெரிந்த பின்னர், தங்களின் தவறுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது மட்டுமல்லாது, ஊடகங்களின் அயோக்கியத்தனத்திற்கு அப்பட்டமான சான்றுமாகும்...
- மடிப்பாக்கம் வெற்றிசெல்வன்
No comments:
Post a Comment