Pages

Friday, 12 August 2011

              ஆகத்து -17 எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாள்



புல்லுக்குக்கூட இங்கே
பட்டா நிலம் இருக்கிறது
புழுவுக்குக்கூடச் சொந்தமாய்ப்
புகலிடம் இருக்கிறது
ஆனால் மண்ணின் மைந்தர்களான
நமக்கு மட்டும்தான்

அண்டி வாழ்வதற்கும்
ஆதாரமில்லை
ஒண்டிப் பிழைப்பதற்கும்
உத்தரவாதமில்லை

வெந்து நாம் மடிந்தோம்
விதிமாறவில்லை-நாம்
குந்தி அழக்கூடக்
குடிசை ஏதுமில்லை

பட்டமரம்போல் தானே
பரிதவித்தோம்
பங்கப்பட்டுதானே
சென்த்தைக் கழித்தோம்

ஆண்டைகளாய் பண்ணைகளாய்-நம்மை
அடக்குமுறை புரிந்தவனும்
சாதி வெறித்தனத்தால்-நம்மை
தலைகுனிவு செய்தவனும்

நிமிரவிடாமல் நம்மை
நிலைகுலைய வைத்தான்
அதிகாரங்களை ஏவி
அடிபணிய வைத்தான்

ஊரைவிட்டுத் தள்ளி
சேரியை வைத்தான்

ஒடுக்குமுறைகளால்
உரிமையைப் பறித்தான்
குட்டி குட்டி நம்மை
குறுகிட
வைத்தான்
அட்டைகளாய் நமது
ரத்தத்தைக்
குடித்தான்

மாட்டுக்கு ஊத்துகிற
கஞ்சியைக் குடி என்றும்
மக்கிய நெல்லைக்
கூலியாய்ப் பிடி என்றும்
கையை மடக்கித்
தண்ணீரைக் குடி
என்றும்
கக்கத்தில் சுருட்டி
சட்டையை வை என்றும்

தோளில் போடும் துண்டை
இடுப்பிலே கட்டென்றும்
தூரத்திலேயே நீ
கைகட்டி நில்லென்றும்

தூரோகிகள் நம்மைத்
துடிக்க வைத்தான்
தொட்டால் தீட்டென்று-அட
ஒதுக்கிவைத்தான்

நாம் அறுத்த நெல்லில்- அவன்
சோறுதின்று கொழுத்தான்
நமக்கு மட்டும் சிரட்டையில்-அட
கூழ் ஊற்றிக் கொடுத்தான்

இந்த இழிவை ஏற்படுத்தியவனை
இந்த இன்னலை நிரந்தரம் செய்தவனை
எட்டி உதைப்பதற்கு- அவன்
எலும்பை முறிப்பதற்கு
எவனாவது தோன்றுவானா என
ஏங்கி அழுதோம்
நினைத்து போலவே
நெருப்பு மின்னலாய்
ஒருவன் தோன்றினான்
சாதிகளின் குரல்வளையில்
ஈட்டியை ஊன்றினான்

வஞ்சகத்திற்கும் சூழ்ச்சிகளுக்கும்
வால் பிடித்தவர்கள் நடுவே
பதவிகளுக்கும் பகட்டுகளுக்கும்
கால்பிடித்தவர்கள் நடுவே

அக்கினிப் பிழம்பாய்- ஒருவன்
இதோ அவதரித்தான்
நம் அவதிகளின் கிழக்கில்
சூரியன் போல் வந்துதித்தான்

மானுடம் எங்கு தலைகுனிகிறதோ
மனிதம் எங்கு கொலையுறுகிறதோ
அங்கெல்லாம் ஒரு புரட்சியாளன்
தோன்றத்தான் செய்கிறான்

எங்கெல்லாம் இனவெறி
தலைவிரித்தாடுகிறதோ
எங்கெல்லாம் ஏதேச்சதிகாரம்
தாண்டவம் போடுகிறதோ

அங்கெல்லாம் ஒரு கலகக்காரன்
பிறக்கவே செய்கிறான்

வர்க்க பேதத்தை
உடைத்தெறியவே
மார்க்ஸ் பிறந்தான்

வஞ்சக பூர்ஷ்வா
இனத்தை ஒழிக்கவே
லெனின் பிறந்தான்

இனவெறிச் சுவரை
இடித்துத் தள்ளவே
மண்டேலா பிறந்தான்

இந்து மதவாத
துரோகம் சாயவே
அம்பேத்கர் பிறந்தான்

ஆரியன் செய்த
சூழ்ச்சியை முடிக்க
ஈ.வெ.ரா. பிறந்தான்

அவலம் சுமந்த
மக்களை மீட்க
ஜீவானந்தம் பிறந்தான்

ஏகாதிபத்திய
குரல் வளையை நெறிக்க
பிடல் காஸ்ட்ரோ பிறந்தான்

ஈழத்தை மீட்கும்
இரும்புப் பறவையாய்
பிரபாகரன் பிறந்தான்

இந்த வரிசையில்....
சேரிக்குடிசையில்....
பிறந்தொருவன் வந்தான்- அவன்

சாதிக் கொடுமையின்
தலையை அறுக்க
ஆயுதமாய் நின்றான்

பாவப்பட்டும் பழிசுமந்தும் கிடந்த
பாமர மக்களைத் தலைநிமிரச் செய்த்து
இவன் பிறப்பு

ஏய்த்துப் பிழைத்த கூட்டத்தையும்
ஏறி மிதித்தவன் ஆட்டத்தையும்
முடித்துவைக்க நிகழ்ந்தது
இவன் பிறப்பு

தமிழகத்தின்
மய்யப் பகுதியில் வீற்றிருக்கும்
பெரம்பலூர் மாவட்டத்தில்
எங்கோ ஒரு மூலையில்...

பொட்டல்காட்டு குணத்தோடும்
புழுதிக்காற்றின் மணத்தோடும்
அமைந்திருக்கும் இந்த
அங்கனூர் சேரியில்தான்...

களிமண் சுவரால் எழுப்பப்பட்டும்
கருப்பஞ் சருகால் வேயப்பட்டும்
பத்துக்குப் பத்து அளவில் மட்டும்
குனிந்தாலும் தாழ்வாரம்
தலையில் தட்டும்

இந்தக் குடிசையில்தான்...

சீமெண்ணை விளக்கு எரியும்- இந்தக்
கூடாரத்தில்தான்....

அறிவுத் தந்தை ராமசாமிக்கும்
ஆதித்தாய் பெரியம்மாளுக்கும்

1962 ஆம் ஆண்டு
ஆகத்து 17 ஆம் நாள்
அக்கினி சிசுவாய் அவன் பிறந்தான்

அவனே ' திருமாவளவன்' என்னும்
தீபமாய் ஒளிர்ந்தான்.

அப்படிப்பட்ட மகத்தான தலைவர் பிறந்த நாள்
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட
மக்களின் எழுச்சி நாள்- ஆகத்து 17. தமிழர் எழுச்சி நாள்
                                                          -கவிஞர். இளைய கம்பன்

No comments:

Post a Comment