Pages

Tuesday, 9 August 2011

                                
                                   உச்சநீதிமன்றத் தீர்ப்புடன்  முத்துக்குமரன்                                 பரிந்துரைகளை     நடைமுறைப்படுத்த வேண்டும்!
                                                       -தலைவர்.தொல்.திருமாவளவன் கோரிக்கை.
 

                                                 தமிழ்நாட்டில் இந்தக் கல்வி ஆண்டு முதற்கொண்டே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். இதற்காகப் போராடிய கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் அனைவரையும் பாராட்டுகிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நன்றியைத் தெரிவித்திருக்கிறோம்.

                                                        உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் சமச்சீர் கல்விப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருளாகாது. அதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது சமச்சீர்க் கல்வித் திட்டத்துடன் பள்ளிக்கல்வியை மேம்படுத்தத் தமிழக அரசின் கவனத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

                                                      கடந்த இரண்டரை மாதங்களாகப் பாடம் நடத்தப்படவில்லை. அதனால் சுமார் ஐநூறு மணி நேர வகுப்புகளை மாணவர்கள் இழந்துள்ளனர். மீதமிருக்கும் நாட்களில் விடுமுறையே இல்லாமல் பாடம் நடத்தினால்கூட இந்த இழப்பை ஈடுகட்டமுடியாது. அதுமட்டுமின்றி அரசின் முடிவால் நேர்ந்த குழப்பத்துக்கு மாணவர்களை நாம் பலியாக்கக்கூடாது. ’எல்லா மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவேண்டும்’ (All Pass) என்று சிலர் கோருகின்றனர். அப்படிச் செய்வது கல்வித்தரத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். அதற்குப் பதிலாக, இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வில் மாணவர்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு சற்று எளிமையாக வினாத்தாள்களைத் தயாரிக்க வேண்டும் என்றும்.

                                                   சமச்சீர்க் கல்விக்கான பாடத்திட்டம்தான் என்றாலும் தனியார் பள்ளிகள் தம் விருப்பத்துக்கு ஏற்ப பாட நூல்களைத் தனியார் பதிப்பகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. அதையொட்டி அத்தகைய பதிப்பாளர்களின் பெயர்களும் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகள் தம் விருப்பத்துக்குப் புத்தகங்கள் வாங்குவது மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுப்பதற்காக என்பதைவிட அதில் வணிக நோக்கமே முதன்மையானதாக உள்ளது. அத்துடன், இந்த கல்வியாண்டுக்கு இனிமேல்தான் தனியார் பதிப்பகங்கள் புத்தகங்களை அச்சிடவேண்டும் என்ற நிலையும் உள்ளது. அதனால் மேலும் கால தாமதம் ஏற்படும். எனவே அரசுப் புத்தகங்களையே தனியார் பள்ளிகளும் வாங்கவேண்டுமென தமிழக அரசு ஆணையிடவேண்டும் என்றும்,

                                            அரசுப்பள்ளிகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் முறையைத் தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. கல்வியாளர்களாலும், சர்வதேச அமைப்புகளாலும் பாராட்டப்பட்டப் பெற்ற செயல்வழிக் கற்றல் முறையின் சிறப்பை அறிந்து இப்போது இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. எனவே அனைத்துத் தனியார் பள்ளிகளும் செயல்வழிக் கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

                                                    மேலும், சிறப்பான சமச்சீர் கல்வியை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ள நிலையில், முத்துக்குமரன் குழுவின் இரண்டு முக்கியமான பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, ‘‘பள்ளிக் கல்வி முழுமையும் தமிழ் வழியில் அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மையோருக்கு அவர்கள் விரும்பினால் இப்போது நடைமுறையில் உள்ள அவர்களது மொழியைப் பயிற்று மொழியாகத் தொடர வாய்ப்பு அளிக்கலாம்’’ என்று முத்துக்குமரன் குழு குறிப்பிட்டுள்ளது. அதனைத் தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்-மாணவர் விகிதம் குறித்த முத்துக்குமரன் குழுவின் பரிந்துரையான 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும்,

                                                         கல்வியில் சமூகநீதியை நிலைநாட்ட, ‘‘தனியார் பள்ளிகள் அனைத்திலும் இருபத்தைந்து விழுக்காடு இடங்களை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்’’ என்றுகூறும் கல்வி உரிமைச் சட்டத்தை (RTE Act)) தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள்  சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்.தொல்.திருமாவளவன்.

No comments:

Post a Comment