கருத்துரிமையை மீட்டால் தான் கை விலங்கு அறுபடும்!
அறிவர்.தொல்.திருமாவளவன்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்கிற மகத்தான முழக்கத்தை உரத்து முழங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் செயல் உத்திகளையும் வரையறுத்துக் களமாடி வருகிறது. சாதி, மதம், வர்க்கம், பால், மொழி, இனம் மற்றும் ஏகாதிபத்தியம் என அனைத்துத் தளங்களிலும் பின்னிப் பிணைந்துள்ள முரண்பாடுகளின் அடிப்படையில், உழைக்கும்- ஒடுக்கப்பட்ட சிறுபான்மை- சமூகத்தினரின் விடுதலைக்கான களங்களை அமைத்துப் போராடி வருகிறது. சாதிய முரண்பாடுகள் கூர்மையடையும் சூழலில் சாதிய வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் தலித் மக்களின் உரிமைகளுக்காக அல்லது நலன்களுக்காகப் போராடுவதும் வாதாடுவதும் விடுதலைச் சிறுத்தைகளின் கடமையாகிறது. அதில் சமரசமின்றி, பின்வாங்கலின்றி தலித் மக்களின் குரலாய் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளின் குரல் ஓங்கி ஒலித்துவருகிறது.
எமது போராட்டங்களை உற்றுநோக்கிக் கவனித்து வருவோருக்குச் சான்றுகள் தேவைப்படாது. சாதிய முரண்பாடுகளைப் போலவே, வர்க்க முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள், தேசிய இன முரண்பாடுகள் மற்றும் ஏகாதிபத்திய முரண்பாடுகள் என வெவ்வேறு முரண்பாடுகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக மென்மேலும் கூர்மையடையும் போது, ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்று,குரல் கொடுப்பதும் கைகொடுப்பதும், ஒரு போர்க்குணம் வாய்ந்த இயக்கத்தின் கடமையாகும், அந்தவகையில், விடுதலைச் சிறுத்தைகள் இத்தகைய முரண்பாடுகளுக்கான களங்களில் எப்போதும் ஒடுக்கப்பட்டோரின் பக்கமே நின்று குரல் எழுப்பிவருகிறது. அந்த வரிசையில்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான களத்தில், சிங்களப் பேரினவாதகும்பலின் ஒடுக்குமுறையை எதிர்த்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் குரல் எழுப்புகிறது..
சாதிய முரண்பாட்டுக் களத்தில் தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்கள்! தேசிய இன முரண்பாட்டுக் களத்தில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்! ஒடுக்கப்பட்டவர்களின்பக்கமே விடுதலைச் சிறுத்தைகள் நிற்கும் என்கிற வகையில், ஈழத்தமிழர்களின் பக்கம் நிற்கிறது. சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டிக்கிறது. ஈழத்தில் இனவெறிக்குப் பலியாகும் தமிழர்களில், தலித்துகளுக்காக மட்டும் குரல் கொடுப்போம் என்பதோ அல்லது தமிழ்நாட்டில் தலித்துகளுக்காக மட்டும்தான் போராடுவோம் என்பதோ மிக மிகக்குறுகிய சாதியப் பார்வையாகும்! அத்தகைய சாதியவாத அணுகுமுறையைக் கொண்ட இயக்கமல்ல விடுதலைச் சிறுத்தைகள். அதேவேளையில், தமிழினத்திற்கு எதிரான இனவெறியாட்டத்தை எதிர்ப்பதனால், ஒட்டுமொத்தசிங்கள இனத்தையே வெறுத்துப் பகைக்கும் இனவாத அணுகுமுறையைக் கொண்ட இயக்கமுமல்ல விடுதலைச் சிறுத்தைகள். கடந்த சனவரி 25,2008 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில், இடதுசாரிச் சிந்தனையுள்ள, சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டிக்கிற சிங்களரான திரு. ரணத்குமாரசிங்கே என்பவரைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவைத்தது அதற்கு உரிய சான்றாகும்.
அறிவர்.தொல்.திருமாவளவன்.
No comments:
Post a Comment