Pages

Monday, 29 August 2011

           முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல்
          தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற               
          பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடி 

                                                   செங்கொடி
எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”
         

                                                               கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.
இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.
ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.
சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.
தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி‘
என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.
ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.


                                                                          இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.
ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.
எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.
ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.
கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

                                                                  ‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…
                                                               அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.
                                                           காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

 


                                                ”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.
”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.
                                                   
                                           அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.
                                                      இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

                                                    ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

                                          எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.
                                           அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.
 

                                                             இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.
சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.
‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

                                                          ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’
இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.
பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’
 

                                                    பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

                                                        முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

                                                பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

                                                    சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.
சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.
முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.
மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.
ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.
அப்பத்தான்…”
உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”
‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.
எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?
அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

                                                             செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.
மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.
தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

Friday, 26 August 2011

                  


                      தூக்குக்கு எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்

 


                                                           ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

                                                       இதையடுத்து இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

                                                      இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார்.

                                                        மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார்.

                                                        வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.

மரண தண்டனை கொள்கையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். இதற்காக இன்று ( 26.8.2011) நாடாளுமன்ற அவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.

Thursday, 25 August 2011


            லோக்பால் மசோதா தொடர்பாகநடைபெற்ற                  நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில்                  எழுச்சித்தமிழர் .தொல்.திருமாவளவன்



                                                  24.8.2011 அன்று புதுதில்லியில் இந்திய தலைமை அமைச்சர் இல்லத்தில் லோக்பால் மசோதா தொடர்பாகநடைபெற்ற நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் .தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை:

                                                              மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்களே, அனைத்து கட்சித்தலைவர்களே வணக்கம்
இந்த அரிய வாய்ப்புக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                            அன்னா அசாரே குழுவினரின் போராட்டத்தைஅரசு எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது தான் தற்போதைய முதன்மையான சிக்கலாக உள்ளது.பொதுமக்களின் பேராதரவுடன் அவர்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுபெற்றுவருகிறது.இன்றைய நிலையில் அரசுக்கு இதுவே மிகப்பெரும் சவாலாக உள்ளது.
                                                             நமது நாட்டில் வறுமை,ஊழல்,பயங்கரவாதம்,மற்றும் சாதி,மதம் ஆகியவற்றின் பெயரால் நடக்கும்
                                                            ஓரவஞ்சனைகள் போன்ற தீர்வு காணப்படவேண்டிய எரியும் பிரச்சனைகள் எராளமாக உள்ளன என்பதனை நாம் அறிவோம் .குறிப்பாக தலித் மக்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து வகையிலுமான வன்கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதனை தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ள யாரும் முன்வரத் தயாராக இல்லை .

                                                         இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய ஓரவஞ்சனைகள்,வன்கொடுமைகள்,தலித் மக்களுக்கும்,பிற
உழைக்கும் மக்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நாட்டில் சாதியை ஒழிப்பதற்காக யாரேனும்
                                                           ஒரு சாதாரண ஆத்மாவோ அல்லது மகாத்மாவோ இருக்கிறர்களா?எனினும் ,தற்போது ஊழலை ஒழிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.ஆனால் ,நாடாளுமன்ற
அவைக்கு ஆணையிடும் வகையில் நடந்துகொள்ளும் முறை ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்திற்கான  உச்சநிலை அதிகாரம் அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் .எனவே அன்னா அசாரேவின் போராட்டத்தை முடிவுக்கு
கொண்டுவர வலுவானதொரு முடிவைஎடுக்கவேண்டுமென அரசை கேட்டுகொள்கிறேன்.
                                                            மக்களின் பிரதிநிதிகளே இத்தகையபிரச்சனைகளை இறுதி செய்ய வேண்டும் இதுவே பிரதிநிதித்துவ சனநாயகமாகும் .மாறாக அரசு இத்தகைய நடைமுறைகளை ஊக்கபடுத்தினால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் சனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை .புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் செய்கிற அவமதிப்பாக அமையும் .
                                                             நிறைவாக, அன்னா அசாரே குழுவினரின் கோரிக்கைகள் எளிதில் புறந்தள்ளக்கூடியவை அல்ல என்பதை சொல்ல விரும்புகிறேன்.நாடாளுமன்றத்தின் உச்சநிலை அதிகாரம் நீர்த்துப்போகதவகையில் அவர்களின் கோரிக்கைகளை
அரசு பரிசிலிக்க வேண்டும்.நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவை திரும்பபெறவேண்டிய தேவையில்லை .ஆனால் அம்மசோதாவை வலுவுள்ளதாகவும் ,பயனுள்ளதாகவும்,அமையக்கூடிய வகையில் நீக்கல் மற்றும் சேர்த்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .நன்றி !

 எழுச்சித்தமிழர் .தொல்.திருமாவளவன்

Tuesday, 23 August 2011


மரண தண்டனை ஒழிப்பு மாநாடு 






















                                           
  மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன்,
பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என
மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைக்கும் 
மரண தண்டனை ஒழிப்பு மாநாடு சென்னை மறைமலை நகரில் ஆகத்து 28 
மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது அதில் 
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ,தமிழ் குடிதாங்கி.மருத்துவர் .
அய்யா , சுப.வீரபண்டியன், கவிஞ்ர் அறிவுமதி ஆகியோர்
சிறப்புரையாற்றுகின்றனர் . தமிழர்களே சாதி, மதம், கட்சி கடந்து மூன்று
தமிழர்களின் உயிரைகாப்பாற்ற மரண தண்டனையை ஒழிக்க
அணிதிரளுவிர்ஒன்றுகூடுவிர் மறைமலை நகரில்.


  

Tuesday, 16 August 2011

                தமிழரை இழிவுபடுத்தும் முறைதவறியபேச்சு: அமெரிக்கத்                                                துணைத் தூதரைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.                                                                                    - தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை

 

                                                சென்னையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் மௌரீன் ச்சாவ் (Maureen Chao) என்ற அம்மையார் தமிழர்களை இழிவுபடுத்தும்விதமாகப் பேசியிருக்கிறார். சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்களிடையே வெள்ளியன்று (12.08.2011) பேசும்போது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தாம் ஒரு மாணவியாக இருந்தபோது டெல்லியிலிருந்து ஒரிசாவுக்குப் புகைவண்டியில் பயணம் செய்ததாகவும் இருபத்து நான்கு மணி நேரத்தில் போகவேண்டிய அந்தப் புகைவண்டி 72 மணி நேரம் கழிந்தும்கூடப் போய்ச் சேரவில்லை என்றும் அந்தப் பயணத்தால் தனது சருமம் தமிழர்களைப்போல கறுப்பாகவும் அசிங்கமாகவும் மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
                                                           அமெரிக்கத் துணைத்தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு என்பதில் ஐயமில்லை. இதற்காக அமெரிக்கத் தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், இத்தனை முக்கியமான பொறுப்பில் இருப்பது இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும். இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவுபடுத்தியிருக்கும் மௌரீன் ச்சாவ் அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். அத்துடன் அவரை அமெரிக்க அரசு உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.

                                                        அண்மையில் அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் அவர்கள் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு நடத்தினார். ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாகக் கருத்து தெரிவித்தார். ராஜ்பக்ச அரசின்மீது போர்க்குற்ற விசாரண நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பது தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்கத் துணைத்தூதரின் இந்த ‘ இனவெறிப் பேச்சு ‘ அதிர்ச்சியளிக்கிறது.

                                            அமெரிக்கத் துணைத் தூதர் மௌரீன் ச்சாவ் அம்மையார்    தனது இனவெறிப் பேச்சுக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அமெரிக்க அரசு துணைத்தூதர் மௌரீன் ச்சாவ் அம்மையாரை உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

இவண்

தொல்.திருமாவளவன்.

Monday, 15 August 2011

கொலை குற்றத்திற்கு தண்டனை வேண்டும்.ஆனால் கொலையே                                      தண்டனை என்பது காட்டு மிராண்டிதனம். 
                                                                                  தலைவர் தொல் திருமாவளவன்.
 

                                                       இந்திய அரசே! தூக்கு தண்டனையை ரத்து செய் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய் என வலியுறுத்தி சென்னையில்- 19ந் தேதி தலைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.


தமிழக மாவட்ட தலை நகரங்களில் தமிழகம் முழுவதும் 22ந் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ் ஆர்வலர்களே ஒன்று சேர்வீர் - அனைவரும் வாரீர்.

Friday, 12 August 2011

              ஆகத்து -17 எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாள்



புல்லுக்குக்கூட இங்கே
பட்டா நிலம் இருக்கிறது
புழுவுக்குக்கூடச் சொந்தமாய்ப்
புகலிடம் இருக்கிறது
ஆனால் மண்ணின் மைந்தர்களான
நமக்கு மட்டும்தான்

அண்டி வாழ்வதற்கும்
ஆதாரமில்லை
ஒண்டிப் பிழைப்பதற்கும்
உத்தரவாதமில்லை

வெந்து நாம் மடிந்தோம்
விதிமாறவில்லை-நாம்
குந்தி அழக்கூடக்
குடிசை ஏதுமில்லை

பட்டமரம்போல் தானே
பரிதவித்தோம்
பங்கப்பட்டுதானே
சென்த்தைக் கழித்தோம்

ஆண்டைகளாய் பண்ணைகளாய்-நம்மை
அடக்குமுறை புரிந்தவனும்
சாதி வெறித்தனத்தால்-நம்மை
தலைகுனிவு செய்தவனும்

நிமிரவிடாமல் நம்மை
நிலைகுலைய வைத்தான்
அதிகாரங்களை ஏவி
அடிபணிய வைத்தான்

ஊரைவிட்டுத் தள்ளி
சேரியை வைத்தான்

ஒடுக்குமுறைகளால்
உரிமையைப் பறித்தான்
குட்டி குட்டி நம்மை
குறுகிட
வைத்தான்
அட்டைகளாய் நமது
ரத்தத்தைக்
குடித்தான்

மாட்டுக்கு ஊத்துகிற
கஞ்சியைக் குடி என்றும்
மக்கிய நெல்லைக்
கூலியாய்ப் பிடி என்றும்
கையை மடக்கித்
தண்ணீரைக் குடி
என்றும்
கக்கத்தில் சுருட்டி
சட்டையை வை என்றும்

தோளில் போடும் துண்டை
இடுப்பிலே கட்டென்றும்
தூரத்திலேயே நீ
கைகட்டி நில்லென்றும்

தூரோகிகள் நம்மைத்
துடிக்க வைத்தான்
தொட்டால் தீட்டென்று-அட
ஒதுக்கிவைத்தான்

நாம் அறுத்த நெல்லில்- அவன்
சோறுதின்று கொழுத்தான்
நமக்கு மட்டும் சிரட்டையில்-அட
கூழ் ஊற்றிக் கொடுத்தான்

இந்த இழிவை ஏற்படுத்தியவனை
இந்த இன்னலை நிரந்தரம் செய்தவனை
எட்டி உதைப்பதற்கு- அவன்
எலும்பை முறிப்பதற்கு
எவனாவது தோன்றுவானா என
ஏங்கி அழுதோம்
நினைத்து போலவே
நெருப்பு மின்னலாய்
ஒருவன் தோன்றினான்
சாதிகளின் குரல்வளையில்
ஈட்டியை ஊன்றினான்

வஞ்சகத்திற்கும் சூழ்ச்சிகளுக்கும்
வால் பிடித்தவர்கள் நடுவே
பதவிகளுக்கும் பகட்டுகளுக்கும்
கால்பிடித்தவர்கள் நடுவே

அக்கினிப் பிழம்பாய்- ஒருவன்
இதோ அவதரித்தான்
நம் அவதிகளின் கிழக்கில்
சூரியன் போல் வந்துதித்தான்

மானுடம் எங்கு தலைகுனிகிறதோ
மனிதம் எங்கு கொலையுறுகிறதோ
அங்கெல்லாம் ஒரு புரட்சியாளன்
தோன்றத்தான் செய்கிறான்

எங்கெல்லாம் இனவெறி
தலைவிரித்தாடுகிறதோ
எங்கெல்லாம் ஏதேச்சதிகாரம்
தாண்டவம் போடுகிறதோ

அங்கெல்லாம் ஒரு கலகக்காரன்
பிறக்கவே செய்கிறான்

வர்க்க பேதத்தை
உடைத்தெறியவே
மார்க்ஸ் பிறந்தான்

வஞ்சக பூர்ஷ்வா
இனத்தை ஒழிக்கவே
லெனின் பிறந்தான்

இனவெறிச் சுவரை
இடித்துத் தள்ளவே
மண்டேலா பிறந்தான்

இந்து மதவாத
துரோகம் சாயவே
அம்பேத்கர் பிறந்தான்

ஆரியன் செய்த
சூழ்ச்சியை முடிக்க
ஈ.வெ.ரா. பிறந்தான்

அவலம் சுமந்த
மக்களை மீட்க
ஜீவானந்தம் பிறந்தான்

ஏகாதிபத்திய
குரல் வளையை நெறிக்க
பிடல் காஸ்ட்ரோ பிறந்தான்

ஈழத்தை மீட்கும்
இரும்புப் பறவையாய்
பிரபாகரன் பிறந்தான்

இந்த வரிசையில்....
சேரிக்குடிசையில்....
பிறந்தொருவன் வந்தான்- அவன்

சாதிக் கொடுமையின்
தலையை அறுக்க
ஆயுதமாய் நின்றான்

பாவப்பட்டும் பழிசுமந்தும் கிடந்த
பாமர மக்களைத் தலைநிமிரச் செய்த்து
இவன் பிறப்பு

ஏய்த்துப் பிழைத்த கூட்டத்தையும்
ஏறி மிதித்தவன் ஆட்டத்தையும்
முடித்துவைக்க நிகழ்ந்தது
இவன் பிறப்பு

தமிழகத்தின்
மய்யப் பகுதியில் வீற்றிருக்கும்
பெரம்பலூர் மாவட்டத்தில்
எங்கோ ஒரு மூலையில்...

பொட்டல்காட்டு குணத்தோடும்
புழுதிக்காற்றின் மணத்தோடும்
அமைந்திருக்கும் இந்த
அங்கனூர் சேரியில்தான்...

களிமண் சுவரால் எழுப்பப்பட்டும்
கருப்பஞ் சருகால் வேயப்பட்டும்
பத்துக்குப் பத்து அளவில் மட்டும்
குனிந்தாலும் தாழ்வாரம்
தலையில் தட்டும்

இந்தக் குடிசையில்தான்...

சீமெண்ணை விளக்கு எரியும்- இந்தக்
கூடாரத்தில்தான்....

அறிவுத் தந்தை ராமசாமிக்கும்
ஆதித்தாய் பெரியம்மாளுக்கும்

1962 ஆம் ஆண்டு
ஆகத்து 17 ஆம் நாள்
அக்கினி சிசுவாய் அவன் பிறந்தான்

அவனே ' திருமாவளவன்' என்னும்
தீபமாய் ஒளிர்ந்தான்.

அப்படிப்பட்ட மகத்தான தலைவர் பிறந்த நாள்
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட
மக்களின் எழுச்சி நாள்- ஆகத்து 17. தமிழர் எழுச்சி நாள்
                                                          -கவிஞர். இளைய கம்பன்

Tuesday, 9 August 2011

                                
                                   உச்சநீதிமன்றத் தீர்ப்புடன்  முத்துக்குமரன்                                 பரிந்துரைகளை     நடைமுறைப்படுத்த வேண்டும்!
                                                       -தலைவர்.தொல்.திருமாவளவன் கோரிக்கை.
 

                                                 தமிழ்நாட்டில் இந்தக் கல்வி ஆண்டு முதற்கொண்டே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். இதற்காகப் போராடிய கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் அனைவரையும் பாராட்டுகிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நன்றியைத் தெரிவித்திருக்கிறோம்.

                                                        உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் சமச்சீர் கல்விப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருளாகாது. அதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது சமச்சீர்க் கல்வித் திட்டத்துடன் பள்ளிக்கல்வியை மேம்படுத்தத் தமிழக அரசின் கவனத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

                                                      கடந்த இரண்டரை மாதங்களாகப் பாடம் நடத்தப்படவில்லை. அதனால் சுமார் ஐநூறு மணி நேர வகுப்புகளை மாணவர்கள் இழந்துள்ளனர். மீதமிருக்கும் நாட்களில் விடுமுறையே இல்லாமல் பாடம் நடத்தினால்கூட இந்த இழப்பை ஈடுகட்டமுடியாது. அதுமட்டுமின்றி அரசின் முடிவால் நேர்ந்த குழப்பத்துக்கு மாணவர்களை நாம் பலியாக்கக்கூடாது. ’எல்லா மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவேண்டும்’ (All Pass) என்று சிலர் கோருகின்றனர். அப்படிச் செய்வது கல்வித்தரத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். அதற்குப் பதிலாக, இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வில் மாணவர்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு சற்று எளிமையாக வினாத்தாள்களைத் தயாரிக்க வேண்டும் என்றும்.

                                                   சமச்சீர்க் கல்விக்கான பாடத்திட்டம்தான் என்றாலும் தனியார் பள்ளிகள் தம் விருப்பத்துக்கு ஏற்ப பாட நூல்களைத் தனியார் பதிப்பகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. அதையொட்டி அத்தகைய பதிப்பாளர்களின் பெயர்களும் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகள் தம் விருப்பத்துக்குப் புத்தகங்கள் வாங்குவது மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுப்பதற்காக என்பதைவிட அதில் வணிக நோக்கமே முதன்மையானதாக உள்ளது. அத்துடன், இந்த கல்வியாண்டுக்கு இனிமேல்தான் தனியார் பதிப்பகங்கள் புத்தகங்களை அச்சிடவேண்டும் என்ற நிலையும் உள்ளது. அதனால் மேலும் கால தாமதம் ஏற்படும். எனவே அரசுப் புத்தகங்களையே தனியார் பள்ளிகளும் வாங்கவேண்டுமென தமிழக அரசு ஆணையிடவேண்டும் என்றும்,

                                            அரசுப்பள்ளிகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் முறையைத் தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. கல்வியாளர்களாலும், சர்வதேச அமைப்புகளாலும் பாராட்டப்பட்டப் பெற்ற செயல்வழிக் கற்றல் முறையின் சிறப்பை அறிந்து இப்போது இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. எனவே அனைத்துத் தனியார் பள்ளிகளும் செயல்வழிக் கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

                                                    மேலும், சிறப்பான சமச்சீர் கல்வியை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ள நிலையில், முத்துக்குமரன் குழுவின் இரண்டு முக்கியமான பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, ‘‘பள்ளிக் கல்வி முழுமையும் தமிழ் வழியில் அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மையோருக்கு அவர்கள் விரும்பினால் இப்போது நடைமுறையில் உள்ள அவர்களது மொழியைப் பயிற்று மொழியாகத் தொடர வாய்ப்பு அளிக்கலாம்’’ என்று முத்துக்குமரன் குழு குறிப்பிட்டுள்ளது. அதனைத் தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்-மாணவர் விகிதம் குறித்த முத்துக்குமரன் குழுவின் பரிந்துரையான 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும்,

                                                         கல்வியில் சமூகநீதியை நிலைநாட்ட, ‘‘தனியார் பள்ளிகள் அனைத்திலும் இருபத்தைந்து விழுக்காடு இடங்களை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்’’ என்றுகூறும் கல்வி உரிமைச் சட்டத்தை (RTE Act)) தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள்  சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்.தொல்.திருமாவளவன்.

Monday, 8 August 2011

                     கருத்துரிமையை மீட்டால் தான் கை விலங்கு அறுபடும்!
                                                                           அறிவர்.தொல்.திருமாவளவன்.
                                        
                                                               'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்கிற மகத்தான முழக்கத்தை உரத்து முழங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் செயல் உத்திகளையும் வரையறுத்துக் களமாடி வருகிறது. சாதி, மதம், வர்க்கம், பால், மொழி, இனம் மற்றும் ஏகாதிபத்தியம் என அனைத்துத் தளங்களிலும் பின்னிப் பிணைந்துள்ள முரண்பாடுகளின் அடிப்படையில், உழைக்கும்- ஒடுக்கப்பட்ட சிறுபான்மை- சமூகத்தினரின் விடுதலைக்கான களங்களை அமைத்துப் போராடி வருகிறது. சாதிய முரண்பாடுகள் கூர்மையடையும் சூழலில் சாதிய வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் தலித் மக்களின் உரிமைகளுக்காக அல்லது நலன்களுக்காகப் போராடுவதும் வாதாடுவதும் விடுதலைச் சிறுத்தைகளின் கடமையாகிறது. அதில் சமரசமின்றி, பின்வாங்கலின்றி தலித் மக்களின் குரலாய் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளின் குரல் ஓங்கி ஒலித்துவருகிறது.

                                                   எமது போராட்டங்களை உற்றுநோக்கிக் கவனித்து வருவோருக்குச் சான்றுகள் தேவைப்படாது. சாதிய முரண்பாடுகளைப் போலவே, வர்க்க முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள், தேசிய இன முரண்பாடுகள் மற்றும் ஏகாதிபத்திய முரண்பாடுகள் என வெவ்வேறு முரண்பாடுகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக மென்மேலும் கூர்மையடையும் போது, ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்று,குரல் கொடுப்பதும் கைகொடுப்பதும், ஒரு போர்க்குணம் வாய்ந்த இயக்கத்தின் கடமையாகும், அந்தவகையில், விடுதலைச் சிறுத்தைகள் இத்தகைய முரண்பாடுகளுக்கான களங்களில் எப்போதும் ஒடுக்கப்பட்டோரின் பக்கமே நின்று குரல் எழுப்பிவருகிறது. அந்த வரிசையில்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான களத்தில், சிங்களப் பேரினவாதகும்பலின் ஒடுக்குமுறையை எதிர்த்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் குரல் எழுப்புகிறது..

                                                  சாதிய முரண்பாட்டுக் களத்தில் தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்கள்! தேசிய இன முரண்பாட்டுக் களத்தில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்! ஒடுக்கப்பட்டவர்களின்பக்கமே விடுதலைச் சிறுத்தைகள் நிற்கும் என்கிற வகையில், ஈழத்தமிழர்களின் பக்கம் நிற்கிறது. சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டிக்கிறது. ஈழத்தில் இனவெறிக்குப் பலியாகும் தமிழர்களில், தலித்துகளுக்காக மட்டும் குரல் கொடுப்போம் என்பதோ அல்லது தமிழ்நாட்டில் தலித்துகளுக்காக மட்டும்தான் போராடுவோம் என்பதோ மிக மிகக்குறுகிய சாதியப் பார்வையாகும்! அத்தகைய சாதியவாத அணுகுமுறையைக் கொண்ட இயக்கமல்ல விடுதலைச் சிறுத்தைகள். அதேவேளையில், தமிழினத்திற்கு எதிரான இனவெறியாட்டத்தை எதிர்ப்பதனால், ஒட்டுமொத்தசிங்கள இனத்தையே வெறுத்துப் பகைக்கும் இனவாத அணுகுமுறையைக் கொண்ட இயக்கமுமல்ல விடுதலைச் சிறுத்தைகள். கடந்த சனவரி 25,2008 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில், இடதுசாரிச் சிந்தனையுள்ள, சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டிக்கிற சிங்களரான திரு. ரணத்குமாரசிங்கே என்பவரைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவைத்தது அதற்கு உரிய சான்றாகும்.
அறிவர்.தொல்.திருமாவளவன்.
 



Sunday, 7 August 2011

                   தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு, அதற்காக                                            எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார்.
                                                                          தலைவர் தொல். திருமாவளவன்.


                                           தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு. அந்தத் தீர்வை அடைவதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தனி ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடந்தது.  தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த கருத்தரங்கில்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். 


கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

                                         தமிழ் ஈழமே தீர்வு என்று இந்த நேரத்தில் நாம் உரக்க முழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் ஈழத்தைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். தமிழ் ஈழ கோரிக்கையை யாரும் முன் வைக்க மாட்டார்கள்.

                                                         ஏதேனும் ஒரு தீர்வை சொன்னால் அதை ஒப்புக்கொண்டு அங்கே உள்ளவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்கிற மமதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடம் உருவாகியிருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கு, மமதைக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

                                                       தமிழர்களின் துயரத்திற்கு தமிழ் ஈழம் அமைந்தால் தான் தீர்வு கிடைக்கும். பல ஆயிரம் தமிழர்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவித்த ராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக என மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை.

                                             தனி ஈழமே தீர்வு என்று கூறி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம். தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காக மட்டும் பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
                               உங்களைத்  தமிழர்கள் தொழுவார்கள்
                                                                                     புலவர்.த.சுந்தரராசன்.


 
                                                         சாதியால் தமிழனை இணைத்துவிட முடியாது; மதத்தால் தமிழனை இணைத்திட முடியாது. தமிழால் மட்டுமே தமிழர்களை இணைக்க முடியும் அதுதான் தமிழனுடைய அடையாளம்! தெளிவாகச் சொல்லுகிறோம்; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெயர்மாற்ற பயணம் யாரும் செய்யத் துணியாதது. இந்த பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். இது ஒரு தொடக்கம். சாதி அழுக்கை, மத அழுக்கை எவ்வாறு கழுவுகிறோமோ அதுபோல் மொழியின் மீதுள்ள அழுக்கை நாம் கழுவ வேண்டும். ஆங்கில அழுக்கு, சமற்கிருத அழுக்கு, இந்தி அழுக்கு இப்படிப் பல்வேறு அழுக்குகள் தமிழன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இதைக் கழுவுவது ஒன்றுதான் நமது வரலாற்றை மீட்பதற்கான வழி என்று கருதுகிறோம்.

                                                     நாம் தமிழ் மதத்திற்கு வந்துள்ளோம். தமிழ்த்தேசிய மதத்திற்கு வந்துள்ளோம். நம்மைத் தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான மாற்றம். நீண்டகாலமாக நம்மை பல்வேறு சாதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். மத அழுக்குகளை நம்மீது சுமத்தியிருக்கிறார்கள். ஆகவே, இனித் தமிழ் வழியில் கல்வியைச் சொல்லிக்கொடுங்கள்; தமிழ் வழியில் மருத்துவத்தைச் சொல்லிக்கொடுங்கள்;  இனி ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று போராட வேண்டும். தெருவுக்கும் ஊருக்கும் தமிழ் இருக்க வேண்டும் என்று போராட வேண்டும். எல்லாத் தெருக்களிலும் தமிழ் இருக்க வகை செய்ய வேண்டும். எத்தனையோ அரசியல் கட்சிகள் தோன்றின; மறைந்து போயின; வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் யாரும் செய்ய முடியாத காரியத்தைச் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களே நீங்கள் செய்திருக்கிறீர்கள். இனி நீங்கள் இருக்கும் திசையைப் பார்த்து தமிழர்கள் தொழுவார்கள்.


 தமிழனுக்குத் தேவை தன்னுரிமை! தலை நிமிரத் தேவை மண்ணுரிமை !.

                                                                          தலைவர் . தொல். திருமாவளவன் 
                                                      ஒருபுறம் அந்நிய நாட்டுப் பன்னாட்டு நிறுவனங்கள், நமது நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் அள்ளிக்கொண்டு போகின்றன. இன்னொரு புறம் வடநாட்டைச் சார்ந்தவர்கள் கோடி கோடியாய்க் கொட்டி அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார​்கள். ஆனால், ...இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு,தலைமுறை தலைமுறையாய்க் குடியிருக்கும் குடிசையைக்கூடப் பட்டா வாங்க முடியாத நிலையிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 25 ஆண்டுகளுக்கு மேலாக மனைப்பட்டா பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலே ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.   இரயில்வேக்கு நிலம் எடுக்கின்ற போது எவனாலும் தடைவாங்க முடியவில்லை. எந்தச்சட்டத்தின் அடிப்படையிலே அதற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது? ஆனால், தாழ்த்தப்பட்டவனுக்கு காலனிமனைப்பட்டா வழங்குவதில் மட்டும், பட்டா கொடுப்பதற்கு முன்பே தடையும் கொடுத்துவிடுகிறார்கள். மனைப்பட்டாவுக்குத் தடைவாங்க முடியாத வகையில் ஒரு சட்டத்தை இயற்றி அந்த நிலத்தைக் கையகப்படுத்தக்கூடாதா? 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கிக்கிடக்கின்ற வழக்குகளை உடனடியாக பைசல் செய்யக்கூடாதா? ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிலப்பட்டா மற்றும் மனைப்பட்டா வழங்கக் கூடாதா?

                                                          ஆக, மனைப்பட்டா இல்லாமல் நிலப்பட்டா இல்லாமல் இவர்கள் கிடக்கின்ற காரணத்தினால்தான் தோழர்களே, இவர்கள் கண்டவனைக் கால்பிடித்து வாழ வேண்டிய நிலைமைக்கு, கைக்கட்டி நின்று வாழக்கூடிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்!

                                                       ஆகவே, ஒவ்வொருவருக்கும் மனைப்பட்டா வழங்கிவிட்டால் வீடு கட்டித் தந்துவிட்டால், அவனவன் வேலை செய்வானே தவிர எவன் காலையும் நக்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சாதியக் கட்டமைப்பு நொறுங்கிப் போய்விடும்! தவிடுபொடியாய்த் தகர்ந்துவிடும்! ஆனால், நிலம் இல்லை, மனைப்பட்டா இல்லை. ஆகவே தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை 90 களின் தொடக்கத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் முழங்கிவருகிறது. இந்த மண்ணுரிமையை வென்றெடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான் தோழர்களே,'தமிழனுக்குத் தேவை தன்னுரிமை! தலைநிமிரத் தேவை மண்ணுரிமை!' என்று முழங்குகிறோம். நான், தன்னுரிமைக்காகப் போராட வேண்டுமானால், எனக்கு மண்ணுரிமை வேண்டும்! நான் எங்கே நின்று போராடுவது? அந்தரத்தில் நின்றா போராட முடியும்? தன்னுரிமை பெற்ற ஒரு தேசமாக இந்தத் தமிழ்த் தேசம் விளங்க வேண்டுமானால், இந்த மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் மண்ணுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்! அவர்கள் சாதியால்யாராக இருந்தாலும், மதத்தால் யாராக இருந்தாலும், மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பது எவ்வளவு இன்றியமையாததோ, அனைவருக்கும் வேலைவாய்ப்பு எவ்வள்வு இன்றியமையாததோ அதைவிட இன்றியமையாதது அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் நிலம்! வீட்டையும் நிலத்தையும் கொடுத்தால், கல்வியும் வேலையும்தானாக வரும். கால் ஊன்றிப் போராடுவதற்கு வழியில்லாமல், கல்வி பெறுவதற்குக்கூடக் கையேந்தி நிற்கிறோம்.

                                                                               தலைவர் . தொல். திருமாவளவன்

Friday, 5 August 2011

                              என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்
                                                                               அறிவர்  தொல். திருமாவளவன் .



                                                                          விடுதலைச் சிறுத்தைகள் என்கிற மல்யுத்த வீரனுக்கெதிராக, இங்கே சில நோஞ்சான்கள், சில கயவர்கள் அவதுறூகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் பரப்புகின்ற அவதுறூகளால், வதந்திகளால் இந்த இயக்கத்தை எதுவும் செய்துவிட முடியாது. இந்த இயக்கம் கொள்கை கோட்பாடு என்கிற ஆணிவேர் விட்டு வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மிகுந்த வலிமைபெற்று வருகிறது. திருமாவளவனே இல்லாவிட்டாலும் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும். இதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். காலத்தின் தேவையாக இந்த இயக்கம் மலர்ந்துவருகிறது; வளர்ந்து வருகிறது!

                                    கொள்கை, கோட்பாடு என்கிற சொற்களுக்கு விளக்கம் தெரியாதவர்கள் விடுதலைச் சிறுத்தைகளைப் பழிப்பதனால், அவதுறு பரப்புவதால் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனாள்ப்பட்ட காவல் துறையினரே எப்படி திருமாவளவனை அடக்கிவைக்கலாம், நசுக்கிவைக்கலாம் என்று 1990 லிருந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போதே; அவனுக்கு எக்கச்சக்கமாகப் புலிகள் பணம் கொடுத்திருக்கிறார்கள், நகைகள் கொடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் எங்கோ பதுக்கிவைத்திருக்கிறான் என்று சொன்னவர்கள்தான்!

                          என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்!

                                                                    ஆகவே, எமது தோழர்கள், என்னை அருகிலிருந்து பார்க்கிறவர்கள், இந்த அவதூறுகளை, வதந்திகளைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்பதை இந்த 20 ஆண்டுகளாக நான் பார்த்துவருகிறேன். அந்த வகையிலே, காழ்ப்புணர்வுக் கொண்ட கயமைக்கும்பல் திரித்து எழுதி, திசைதிருப்பிவிட முயன்றாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கொள்கை கோட்பாட்டை முன்னெடுப்பதிலும் அக்கறை செலுத்துவோம்.அதுதான் மிக முக்கியமானது.

                                                            ஆகவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு கட்டுப்பாடுகாத்து இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும். திருமாவளவனின் அழைப்பையேற்று, நாடார்கள் சேர்ந்தார்கள்; வன்னியர்கள் சேர்ந்தார்கள். கவுண்டர்கள் சேர்ந்தார்கள்; இசுலாமிய, கிறித்தவர்கள் சேர்ந்தார்கள். இப்படிப் பல தரப்பட்டவர்களையும் இணைத்து இது ஒரு தமிழ் மக்களுக்கான, தமிழக மக்களுக்கான இயக்கம் என்பதை நாம்நிறுவ வேண்டும்.

 அறிவர்  தொல். திருமாவளவன் .